சம்பந்தன் எவ்வாறு சமஷ்டியை பெற்றுத் தரப் போகிறார்?

பலமான அமைப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்த போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் பெரும் அக்கறை கொள்ளவில்லை. 2004 ம் ஆண்டுத் தேர்தலில் 22 பாராளுமன்ற உறுப்பினர்களை பலம் வாய்ந்த விடுதலைப் புலிகள் மூலம் பெற்றுக் கொண்டு, அவ்வமைப்பையும் பக்கபலமாக வைத்துக் கொண்டு,எம் மக்களின் உணர்வுகளைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்த்தபடி இருந்து விட்டு, இறுதியில் முள்ளிவாய்க்காலில் எமது மக்களையும் விடுதலைப் புலிகளையும் அழிப்பதற்கு வழிவகுத்துஅவர்களைஅரசுக்குக் காட்டிக் கொடுத்ததைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை.

இப்போது மீண்டும் தாங்கள்தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டுஎதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் வைத்துக் கொண்டு எமது மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் வீரவசனம் மட்டும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கயில் தெரிவித்துள்ளார்.அவர் தனது அறிக்ைகயில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

2004 ம் ஆண்டு தொடக்கம் சுமார் 12 ஆண்டுகள் பலமான ஓரு அமைப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டும் இதுவரை தமிழ் மக்களுக்காக எதனைச் சாதித்தார்கள்? எதுவுமே இல்லை. ஏனைய தமிழ்க் குழுக்களின் உதவிகளைநாடினார்களா?அதுவும் இல்லை. இந்த நிலையில் இனிமேலும் தமிழ் மக்கள் இவர்களை நம்பிப் பிரயோசனம் இல்லை. ஒற்றுமையாகச் செயற்படுவோம் என்று கூறிக் கொண்டு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளுடன் கூட கலந்துஆலோசித்து ஒற்றுமையாகச் செயற்படாமல் உள்ளனர்.

ஏற்கனவே பல விடயங்கள் உட்பட மேதின ஊர்வலங்களைஏற்பாடுசெய்வதிலும் தனித்தே செயற்படுகின்றனர்.இவர்களா சிங்களத் தலைமைகளுடன் முட்டி மோதிக் கொண்டோ,கலந்து ஆலோசித்தோ தமிழர்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கப் போகின்றார்கள்?

தமிழ் மக்கள் தேர்தல் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கொடுத்தஆதரவில் ஒரு பகுதியளவு ஆதரவையேனும் எமது கட்சிக்குக் கொடுத்திருப்பார்களேயானால் இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பலபிரச்சினைகளில் பெருமளவுபிரச்சினைகளுக்கு என்னாலும் எனது கட்சியினாலும் இந்தக் குறுகிய காலத்திற்குள் தீர்வைக் கண்டிருக்க முடியும்.குறைந்த பட்சம் எமது கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைத்திருந்தால் நிலைமை எவ்வளவோ மாறியிருக்கும்.

தமிழ் மக்களின் வாக்குப் பலத்தால் அமைந்ததாகக் கூறப்படும்ஆட்சி மாற்றமும், அதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட அரசும் இருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் எமது மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைக் கூட தீர்த்து வைக்க முடியாத இவர்கள் இனி எப்போது எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கப் போகின்றார்கள்?

எமது மக்களால் அமைந்ததாகக் கூறப்படும் அரசாங்கத்தில் முறைப்படி இதயசுத்தியுடன் பேரம் பேசியிருந்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்திருக்க முடியும். புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் எதிர்கால வளமான வாழ்விற்கு வழிசமைத்துக் கொடுத்திருக்க முடியும். போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் வறுமை நிலையினைப் போக்கி நிம்மதியான ஒரு எதிர்காலத்தை அமைத்துக் கொடுத்திருக்க முடியும்.ஆனால் முன்னாள் போராளிகள் தற்கொலை செய்து கொள்ளுமளவிற்கு நிலைமை படுமோசமாகக் போய்க் கொண்டிருக்கின்றது.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளைக் கைது செய்கின்றார்கள். இவர்களால் என்ன செய்ய முடிந்தது? இவர்களிலும் பார்க்க குற்றம் புரிந்தவர்களை அரசாங்கம் விடுதலை செய்யவில்லையா? இவைகளை அரசுக்கு எடுத்துக் கூறி அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை?

இவர்களால் எதுவுமே முடியாது. அதேநேரத்தில்அவர்கள் உண்மைக்குப் புறம்பான பிரசாரங்களில் ஈடுபடாது உண்மையாக நடந்திருந்தால் மக்கள் எனக்கும் தேர்தலில் ஆதரவு அளித்திருப்பார்கள்.நிச்சயமாக என்னால் அவ்வாறான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க உதவியிருக்க முடியும்.ஏனெனில் நான் எவரிடமும் எந்தச் சலுகையும் கேட்டுப் பெற்றதும் இல்லை, இனிப் பெறப் போவதுமில்லை.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவாக இருந்தாலும் சரி, இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவானாலும் சரி,சந்திரிக்காஅம்மையாராக இருந்தாலும் சரி, இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவாக இருந்தாலும் சரி, நான் எவரிடமும் யாசகம் பெற்றது கிடையாது. ஐக்கிய இலங்கைக்குள் மூவின மக்களும் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக என் உயிரையும் துச்சமாக நினைத்து தமிழ் மக்களுக்கு இந்த அவலநிலை வந்து விடக் கூடாது என்பதற்காக உண்மையைக் கூறிஅரசியல் செய்தவன் நான்.எனவே எனது கோரிக்கைகளை எவரும் இலகுவில் தட்டிக் கழிக்கமுடியாது.நான் அதற்கு இடம் கொடுக்கவும் மாட்டேன்.

மறைந்த பாரதப் பிரதமர் அன்னை இந்திராகாந்திதொடக்கம் இன்று வரை எமது இனப்பிரச்சினை தொடர்பில் அதிகமான அக்கறையும் ஆர்வமும் காட்டி வரும் ஒரேநாடு இந்தியா மட்டும்தான். எனவே இந்தியாவை புறம்தள்ளி நாம் எமது பிரச்சினைக்கு இலகுவாக ஒரு தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியாது.

ஆனால் சமீப காலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனப்பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக் கொள்ள தென்னாபிரிக்கா,அமெரிக்காபோன்ற நாடுகளைத் தேடி ஓடுகின்றது. இது இந்தியாவைஆத்திரமூட்டக் கூடியதும் அவமானப்படுத்தக் கூடியதுமான செயலுக்கு ஒப்பானதாகும். இந்தியாவைத் தவிர வேறு எவராலும் எமக்கு ஒரு சரியான வழியைக் காட்ட முடியாது.தற்போது இந்தியா அமைதியாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

சமஷ்டி ஆட்சி முறைமைக்கு சிங்களத் தலைவர்கள் அனைவரும் எதிர்ப்புக் காட்டி வரும் இவ்வேளையில், எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் சமஷ்டியைத் பெற்றுத் தருவேன் என சூழுரைக்கின்றார். சாத்தியப்படுமா? மக்களை ஏமாற்றி பதவியைக் காப்பாற்றிக் கொள்ள முற்படுகின்றார்.

சமஷ்டிக்குப் பதிலாக இந்திய முறையிலான ஒரு தீர்வினைப் பெற்றுக் கொடுக்க ஏன் முயலவில்லை. இந்தியாவை பயன்படுத்திக் கொள்ள ஏன் தயங்குகின்றார்?காலங்காலமாக இவர்கள் ஆற்றும் உரைகளால் நியாயமாக சிந்திக்கும் சிங்களத் தலைவர்கள் கூட எமது பிரச்சினைகளில் தலையிடாதுஒதுங்கிக் கொள்கின்றார்கள்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலரின் கூற்றுக்கள் சில மிதவாத தலைவர்களை மாற்றம் அடையச் செய்கின்றன.

இவர்களால் முடியாவிட்டால் உண்மையைக் கூறி ஒதுங்கிக் கொள்ளட்டும்.நாங்கள் மக்களிடம் சென்று உண்மை நிலையினை எடுத்துக் கூறி மக்களுக்கு ஒரு சரியான வழியைக் காட்டுவோம். அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு அமைப்பை உருவாக்கி தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு நிலையான தீர்வினைப் பெற்றுக் கொடுக்க நாம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். இந்த முயற்சிக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியை விட்டு வெளியேறி தமிழ்த் தேசியக் கூடடமைப்பின் மாயவலைக்குள் சிக்கித் தவிக்கும் எமதுமுன்னாள் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் மீண்டும் எமதுகட்சியில் இணைந்து செயலாற்றி பங்களிப்பினை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.