சுதந்திர தினக் கொண்டாட்டம் ! கூட்டமைப்பு பங்கேற்பு ! மஹிந்த புறக்கணிப்பு !

இலங்கையின் 68ஆவது சுதந்திர தினக் கொண்டாடம் இன்று வியாழக்கிழமை காலிமுகத்திடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஆளும் கட்சி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். இன்று காலை காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ள சுதந்திர தின அணிவகுப்பில் 4,025 இராணுவம், 984 கடற்படை, 1,216 விமானப்படைச் சிப்பாய்களும், 887 பொலிஸார், 674 சிவில் பாதுகாப்புப் படையினர், 7 மாணவப் படையணியின் அதிகாரிகள் உட்பட 438 மாணவ படையணியினரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஸ்கொட்லாந்து சென்று நேற்றுக் காலை நாடு திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் இந்நிகழ்வில் பங்கேற்பார். அவருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்பார். கடந்த வருடம் ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சியில் மஹிந்த ஆதரவு தரப்பு, அரசின் சுதந்திர தினத்தைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதற்கமைய மஹிந்த ஆதரவு தரப்பினர் சுதந்திர தினத்தை தனியாகக் கொண்டாடவுள்ளனர்.

இதேவேளை, சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன. சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள சுதந்திரத்தின் இதயத்துடிப்பு என்ற மாபெரும் கலை நிகழ்ச்சி இன்று மாலை 7 மணிக்கு காலிமுகத்திடலில் ஆரம்பமாகவுள்ளது. ‘உலகைப் பார்க்கும் புது பாதை கோர்க்கும் தீர்க்கதரிசனம்’ என்ற தொனிப்பொருளில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இக்கலை நிகழ்ச்சியானது, முப்படையினர், பொலிஸ், சிவில் பாதுகாப்புப் படையினர் ஆகியோருடன் இலங்கையின் பிரபல இசைக் கலைஞர்களின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது