சுப்பிரமணிய சாமி மீது தக்காளி, முட்டை வீச்சு?

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் நகரில் நடைபெறும் சர்வதேச தீவிரவாதம் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்பதற்காக பா.ஜ.க. மூத்த தலைவரான சுப்பிரமணிய சாமி இன்று வந்தார். கருத்தரங்கம் நடைபெறும் கல்லூரி வளாகத்தை நோக்கி இன்று காலை அவர் காரில் சென்றுகொண்டிருந்தபோது, உள்ளூர் காங்கிரஸ் தலைவரான நரேஷ் திவேதி தலைமையில் காங்கிரசார் அவரது காரை வழிமறித்து சுப்பிரமணிய சாமிக்கு எதிராக கோஷமிட்டனர். கூட்டத்தில் இருந்த சிலர் சுப்பிரமணிய சாமி மீது தக்காளி மற்றும் முட்டைகளை வீச முயன்றனர்.

இதை சுப்பிரணிய சாமிக்கு பாதுகாப்பாக சென்ற ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர் தடுக்க முயன்றார். அவருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையில் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. சுப்பிரமணிய சாமி மீது வீசப்பட்ட தக்காளிகளும், முட்டைகளும் அதிர்ஷ்டவசமாக அவர்மீது விழாமல் காரின் வெளிப்பக்கத்தில் பட்டு தெறித்தன. அதற்குள் அங்கு விரைந்துவந்த போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி, சுப்பிரமணிய சாமியின் கார் பாதுகாப்பாக செல்வதற்கு வழி ஏற்படுத்தி தந்தனர்.