ஜனாதிபதிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை ‘நாடாளுமன்ற சதிப்புரட்சி’

பிரேஸிலின் ஜனாதிபதிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள டில்மா றூசெப், தவறெதனையும் தான் செய்திருக்கவில்லை என்பதை மீள வலியுறுத்தியுள்ளதோடு, பதவியிலிருந்து தான் அகற்றப்பட்டமையை, “நாடாளுமன்ற அரசியல் சதிப்புரட்சி” என்று வர்ணித்துள்ளார். அத்தோடு, பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக, இருக்கக்கூடிய அனைத்து சட்டவழிகளிலூடாகவும் மேன்முறையீடு செய்யப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

டில்மா றூசெப்பை, ஜனாதிபதிப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான பிரேஸில் செனட்டின் வாக்கெடுப்பு, நேற்றுமுன்தினம் புதன்கிழமை, இலங்கை நேரப்படி பின்னிரவில் முடிவடைந்தது. இதில், டில்மா றூசெப்பைக் குற்றவாளியாக இனங்கண்டு, 61-20 என்ற வாக்குகள் கணக்கில் வாக்கெடுப்பு வெற்றிபெற்றது.

ஜனாதிபதிக்கான வாசஸ்தலத்தில், அவரைச் சூழ்ந்துகொண்ட ஆதரவாளர்களுக்கு மத்தியில் உரையாற்றிய டில்மா றூசெப்,
“எனது வாழ்க்கையில் நான் சந்திக்கும் இரண்டாவது சதிப்புரட்சி இதுவாகும். முதலாவது, (1964ஆம் ஆண்டு இடம்பெற்ற) இராணுவப்புரட்சி. இரண்டாவது, நான் தெரிவுசெய்யப்பட்ட பதவியிலிருந்து என்னை நீக்கிய, நாடாளுமன்ற சதிப்புரட்சி” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த டில்மா றூசெப், “எங்களைத் தோற்கடித்துவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள், ஆனால் அவர்கள் தவறாக எண்ணுகிறார்கள். இந்த நேரத்தில், சென்றுவருகிறேன் என்று நான் உங்களிடம் சொல்ல மாட்டேன். மீண்டும் விரைவில் உங்களைப் பார்க்கிறேன் என்று உங்களிடம் சொல்லலாமென, நான் உறுதியாக நினைக்கிறேன்” என்றார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த றூசெப், இந்த நாடாளுமன்ற சதிப்புரட்சியானது, பொருளாதாரத்தில் உச்சநிலையில் இருப்போரால் ஆதரவளிக்கப்பட்ட ஒன்று எனவும், தன்னுடைய பொருளாதாரத் திட்டங்களால் பல மில்லியன் பேரை வறுமையிலிருந்து மீட்ட நலன்திட்டங்கள், இல்லாது செய்யப்படுமெனவும் எச்சரிக்கை விடுத்தார்.

டில்மா றூசெப்பின் பதவி விலக்கலைத் தொடர்ந்து, 13 ஆண்டுகாலமாக பிரேஸிலில் நிலவிவந்த இடதுசாரி ஆட்சியை நிறைவுசெய்து, வலதுசாரிக் கொள்கைகளையுடைய, பழைவாதியான மைக்கல் தெமருக்கு, ஆட்சியமைக்கும் வாய்ப்பைக் கொடுக்கிறது. ஆனால், அவரது பணி, இலகுவாக இருக்குமென எதிர்பார்க்கப்படவில்லை.

ஜனாதிபதிப் பதவியிலிருந்து நீக்குவதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை செனட் வெளிப்படுத்திய போதிலும், பொது அரசியல் வாழ்வில் 8 ஆண்டுகளுக்குப் பதவியை வகிப்பதைத் தடைசெய்யும் வாக்கெடுப்பில், 42-36 என்ற நிலையான ஆதரவு மாத்திரமே கிடைத்தது. இதன்காரணமாக, அதற்குத் தேவையான மூன்றிலிரண்டு ஆதரவு கிடைத்திருக்கவில்லை. இது, மைக்கல் தெமருக்கு, எதிர்காலத்தில் காணப்படக்கூடிய அழுத்தங்களை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

இதில் குறிப்பிடத்தக்கதாக, புதிய ஜனாதிபதி மைக்கல் தெமர் மீது, ஊழல் குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன. அத்தோடு, டில்மா றூசெப்பை 2 தடவைகள் தெரிவுசெய்த மக்கள் எதிர்க்கும் கொள்கைகளான தனியார்மயப்படுத்தல், அரச சொத்துகளை விற்றல் போன்றவற்றைக் கொண்டுள்ளார்.

ஆனால் மறுபுறத்தில், பெட்ரோபஸ் எண்ணெய் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளே, டில்மாவைப் பதவி விலக்குவதற்கான ஆரம்பமாக அமைந்த போதிலும், அவருக்கெதிராக நேரடியான ஊழல் குற்றச்சாட்டுகள் எவையும் கிடையாது. அவரைப் பதவியிலிருந்து விலக்குவதற்கு, நாட்டின் பிரதிநிதிகள் சபை, 367-137 என்ற கணக்கில் வாக்களித்திருந்த நிலையில், 594 பேர் கொண்ட அச்சபையில் காணப்படும் உறுப்பினர்களில் 318 பேர் மீது, குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டோ அல்லது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டோ வருகின்றமை, பிரேஸில் அரசியலில் காணப்படும் சிக்கலான நிலைமை வெளிப்படுத்துகிறது.