ஜேர்மனியின் சமஷ்டி முறைமையை பரிசீலிக்கத் தயார்!

இனப்பிரச்சினைக்கு, ஜேர்மனியில் உள்ள சமஷ்டி ஆட்சிமுறை போன்ற தீர்வை ஏற்றுக்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் இணங்கினால், அதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிசீலிக்கத் தயார் என்று தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். சண்டே ரைம்ஸ் வாரஇதழுக்கு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அளித்திருந்த செவ்வி ஒன்றில், “தற்போதைய அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தசட்டத்தின் ஏற்பாடுகளும் மாகாணசபை முறைமையின் ஏற்பாடுகளும் அவ்வாறே இருக்கும். இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசியலமைப்பில் என்ன இருக்கிறதோ, அது தொடர்ந்தும் இருக்கும். எனினும் தீர்வு முறை என்று வரும்போது நாங்கள் ஜேர்மனியில் உள்ள முறைமை தொடர்பாக ஆராய்வதற்கு தயாராக இருக்கிறோம். அத்துடன் வேறுபல முறைமைகள் குறித்தும் ஆராய்வோம்” என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து, கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்டுள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், ”நீண்டகாலமாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு எத்தகைய தீர்வொன்றை வழங்க வேண்டுமென்பதை எமது தேர்தல் அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். தற்போது இனப்பிரச்சினைக்கான தீர்வொன்று எட்டப்படுவது குறித்த சில நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்து வருவதைக் காண முடிகிறது. ஜேர்மனி ஆட்சிமுறைமை குறித்து சிறிலங்கா அரசாங்கம் கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் உள்ள ஆட்சி முறையென்பது சமஷ்டிக் கட்டமைப்பை உள்வாங்கிய சிறந்த ஆட்சிமுறைமையாகும். இனப்பிரச்சினைக்கான தீர்வாக சிறிலங்கா அரசாங்கம் ஜேர்மனியில் உள்ளது போன்ற ஆட்சிமுறைமைக்கு உடன்படுமானால், நாம் அதுகுறித்து பரிசீலிப்பதற்கு தயாராக இருக்கிறோம். அரசியல்தீர்வு விடயம் சம்பந்தமாக ஜேர்மனி சமஷ்டி முறைமை குறித்து அல்லது வேறெந்த முறைமைகள் குறித்தும் எமக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் இதுவரையில் பேச்சுக்கள் எதுவும் இடம்பெறவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.