டக்ளஸுக்கு பாவமன்னிப்பு?

(எஸ். நிதர்ஷன்)

“கடந்தகால ஆட்சியாளர்களுடன் இணைந்து தேன்நிலவு கொண்டாடிய நாடாளுமுன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது பாவமன்னிப்புக் கோரும் நிலையில் உள்ளார். அவருக்கு பாவமன்னிப்புக் கொடுக்க வேண்டுமா, இல்லையா? என்பதை, தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும்” என, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது 63ஆவது பிறந்த நாள் நிகழ்வு, வல்வெட்டித்துறையில் உள்ள அவர் பிறந்த வீடு அமைந்திருந்த காணியின் முன்னால், இன்று (26) நடைபெற்றது.

இதனையடுத்து, “மாவீரர் தினங்களை அனுஷ்டிப்பதற்காக, பொதுமக்கள் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளில், அரசியல்வாதிகள் தமது சுய அரசியல் இலாபத்தின் பொருட்டு குளிர்காயக்கூடாது” என, டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்த கருத்துத் தொடர்பில், சிவாஜிலிங்கத்திடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த சிவாஜிலிங்கம், “கடந்த ஆட்சிக் காலத்தில், மஹிந்த ராஜபக்ஷவுடனும் பசில் ராஜபக்ஷவுடனும் பங்காளிகளாக இருந்துகொண்டு, அவர்களோடு தேன்நிலவு கொண்டாடிய டக்ளஸ் தேவானந்தா, அன்று மாவீரர் நினைவு தினத்தை அனுஷ்டிக்க வேண்டும் எனக் கூறவில்லை” என்றார்.

அத்துடன், “முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை வடக்கு மாகாண சபையின் முன்பு நாம் அனுஷ்டித்த போது, அதனைக் காலால் தட்டி வீழ்த்திய போது, முள்ளிவாய்க்கால் கடலிலே கடற்படையின் அச்சுறுத்தலையும் மீறி நாம் அஞ்சலிகளை செலுத்திய போது, எமக்கு இராணுவத்தால் அச்சுறுத்தல் இருந்த போது, மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க வேண்டும் எனக் கூறாத டக்ளஸ் தேவானந்தா, இன்று தானும் ஏதோ கூற வேண்டும் அல்லது பாவமன்னிப்புக் கோருவது போன்று, இவ்வாறான கருத்துகளை வெளியிட்டு வருகின்றார்.

“இந்நிலையில் அவருக்கு பாவமன்னிப்புக் கொடுக்க வேண்டுமா இல்லையா என்பது தொடர்பில், தமிழ் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்” என, சிவாஜிலிங்கம் மேலும் கூறினார்.

(Tamil Mirror)