டெல்லியில் ஆம் ஆத்மி வென்றால்…கேஜ்ரிவாலை புகழ்ந்த காங்கிரஸ் எம்.பி.

டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைகளுக்கானத் தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இதில் 652 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர், 1.42 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க இருந்தனர். ஆனால், 61 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவானது. கடந்த 1998-ம் ஆண்டுக்குப்பின் வாக்கு சதவீதம் 61 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டில் 67 சதவீத வாக்குகள் பதிவானது

இந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று மாலை வெளியாகின. இதில் ஆம் ஆத்மி கட்சியே மூன்றாவது முறையாகவும், தொடர்ந்து 2-வது முறையாகவும் ஆட்சியைக் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த முறை 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை வென்ற ஆம் ஆத்மி கட்சி இந்த முறை அதைக்காட்டிலும் சற்று குறைவாக 60 இடங்களுக்குள் பெறும் என்றும், பாஜக கடந்த முறை 3 இடங்கள் மட்டும் பெற்ற நிலையில் இந்த முறை சராசரியாக 10 இடங்கள் வரை பெறக்கூடும் எனத் தெரிவித்தன.
ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பாலும் வெற்றி வாய்ப்பு குறைவு என்றே கருத்துக்கணிப்புகளில் முடிவுகள் வெளியாகின.

இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, பாஜக, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டன. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியாகும்போதுதான் உண்மை நிலவரம் தெரியவரும்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி : படம் ஏஎன்ஐ
இதற்கிடையே மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரியிடம் டெல்லி தேர்தலில் காங்கிரஸ் செயல்பாடு குறித்து நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் கூறுகையில், ” டெல்லி தேர்தலில் காங்கிரஸ் கட்சி சிறப்பாகச் செயல்பட்டுள்ளது, மிகப்பெரிய வெற்றி பெறுவோம் என்று ஒருபோதும் கூறமாட்டேன். எங்களின் முழு பலத்தையும் பயன்படுத்தி இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளோம். அதற்கு ஏற்றார்போல் தேர்தல் முடிவுகள் வந்தால் எங்களுக்கு மகிழ்ச்சிதான்.

இந்த தேர்தலில் பாஜக வகுப்புவாத விஷயங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்தது. ஆனால் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் வளர்ச்சித் திட்டங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்தார். கேஜ்ரிவால் தேர்தலில் வெற்றி பெற்றால், அது வளர்ச்சி திட்டங்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படும் ” எனப் பாராட்டியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள், எம்.பிக்கள் ஆம் ஆத்மி கட்சியை கடுமையாக விமர்சித்தும், கேஜ்ரிவாலை தாக்கியும் பேசினர். இந்த சூழலில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கேஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் எம்.பி. பாராட்டுத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.