ட்ரம்ப் உத்தரவுக்கு எதிர்ப்பு: 10,000 அகதிகளை பணியமர்த்த ஸ்டார்பக்ஸ் நிறுவனம் முடிவு

அமெரிக்காவின் புகழ்பெற்ற காப்பி நிறுவனமான ஸ்டார்பக்ஸ், அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 அகதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹவர்ட் ஸ்குல்ட்ஸ் தெரிவித்துள்ளார். ட்ரம்பின் குடியுரிமை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒதுங்கியும், மவுனமாகவும் இருக்க முடியாது என்றும் ஹாவர்ட் ஸ்குல்ட்ஸ் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ஹவர்ட் ஸ்குல்ட்ஸ் கூறியதாவது, “நான் ஆழ்ந்த கவலையுடனும் கனந்த இதயத்துடனும் உங்களுக்கு ஓர் உறுதியை அளிக்கிறேன். நாம் முன்னெப்போதும் இல்லாத கால சூழலில் உள்ளோம். இப்போது எழுந்துள்ள பிரச்சினையில் நம் நாட்டின் மனசாட்சியாக நாம் இருக்கிறோம். அமெரிக்கர்களின் கனவுகளும், வாக்குறுதிகளும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி, புதிய வாழ்வை ஏற்படுத்திய நீண்ட நெடும் வரலாற்றை கொண்டது.

அமெரிக்காவில் புதியதாக தலைமையேற்றுள்ள புதிய அரசால் ஒவ்வொரு நாளும் அறிவிக்கப்படும் திட்டங்களால் நிலையற்றதன்மை உருவாகியுள்ளது. இதனை கண்டு ஸ்டார்பக்ஸ் நிறுவனம் ஒதுங்கியும் செல்லாது மவுனமாகவும் இருக்காது என்றும் மக்களுக்கு உறுதி கூறுகிறேன்.

ஸ்டார்பக்ஸ் நிறுவனம் 75 நாடுகளை சேர்ந்த 10,000 அகதிகளை அடுத்த 5 வருடங்களுக்கு பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது.

எங்களது வணிகத்தின் நோக்கமே மனித நேயத்தை வளர்ப்பது. ஒரு மனிதன், ஒரு கோப்பை, ஒரு அண்டை தேசம் என்பதே அது.

அந்த அண்டைதேசம் சிகப்பாகவும் இருக்கலாம், நீலமாகவும் இருக்கலாம். கிறிஸ்த்தவர்கள் நாடாகவோ, இஸ்லாமியர்கள் நாடகாவோ இருக்கலாம். இதில் எங்களது நிலைப்பாடு மாறாது” என்று கூறினார்.

முன்னதாக அமெரிக்க அதிபராக பதிவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை குடியுரிமைக் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தார். அதன்படி சிரியா அகதிகள் அமெரிக்காவில் நுழைய நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மறுஉத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும் எனவும் அவர் அறிவித்தார்.

மேலும் ஈரான், இராக், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் பயணிகளுக்கு 90 நாட்களுக்கு விசா வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.