தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க PTIயை கையில் எடுங்கள்!

இந்திய – இலங்கை ஒப்பந்தத்துக்கு அமைய தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் வேறு கைதிகளுக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொது மன்னிப்பளித்து அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில், நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமை மேலும் மோசமடையும் எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கோரியுள்ளார். இது தொடர்பாக நேற்று திங்கட்கிழமை (22) ஊடகங்களுக்குக்கு அவர் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ‘சில தமிழ் அரசியல்வாதிகள் வழங்கிய உறுதிமொழிகளுக்கு அமைய, தமக்கு விடுதலை கிடைக்குமென நம்பி, முன்பு இரு தடவைகள் தங்களது உண்ணாவிரதத்தைக் கைவிட்ட தமிழ் அரசியல் கைதிகள், மீண்டும் தமது உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.

இம்முறை தங்களில் 15 பேர் மட்டுமே உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் தாம் மட்டுமே அடிக்கடி நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்படுவதாகவும் தம்மை விடுதலை செய்கின்ற தீர்மானத்தை எடுக்கின்ற அதிகாரம் தனக்கு இல்லையென்று நீதவான் கூறுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். அதனாலேயே, இம்முறை தாங்கள் மட்டுமே உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாகவும் முன்பு தம்முடன் உண்ணாவிரதம் இருந்தவர்களில் 39பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எஞ்சியோர் எதுவித விசாரணையுமின்றி தொடர்ந்;து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தமக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், தமது உடல்களை யாழ்ப்பாணம், கண்டி ஆகிய மருத்துவ பீடங்களில் கையளிக்குமாறும் தமது அங்களை பொருந்தக்கூடியவர்களுக்கு பொருத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி அவர்களே, தற்போது நிலைமை மிக வேகமாக மோசமடைந்து வருகிறது. அதிகாரம் படைத்த சிலர் குறிப்பிட்ட சிலரின் கைதுகளை அனுமதிக்கமாட்டோம் என கூறியுள்ளனர். அதுதான் நிலைமையானால் தாங்கள் தங்களுக்குரிய அதிகாரங்களை பாவித்து அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். சமாதானத்தையும் சகவாழ்வையும் தோற்றுவிப்பதற்காக 27-07-1987 அன்று செய்துகொள்ளப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்துக்கு அமைய, 2-11 சரத்தின்படி, இலங்கை ஜனாதிபதி, தற்போதைய பயங்கரவாதத் தடைச்சட்டம், அவசரகாலச்சட்டம் ஆகியவற்றின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், வழக்குத் தொடரப்பட்ட அல்லது குற்றவாளியாகக் காணப்பட்ட அரசியல் மற்றும் வேறு கைதிகளுக்கு பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யலாம் எனக்கூறுகிறது.

அவ்வாறு விடுதலை செய்யப்படுபவர்களை இலங்கை அரசு பொதுவாழ்வுக்கு தயார்படுத்தும் நோக்கோடு புனர்வாழ்வு அளிக்கவேண்டுமெனவும் அதற்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு வழங்குமெனவும் கூறுகின்றது. ஜனாதிபதி அவர்களே, யுத்தம் முடிந்து சமாதானம் கொண்டுவரப்பட்டதன் பின்பு மேலே கூறப்பட்டுள்ள அதிகாரத்தை உபயோகித்து தடுத்து வைக்கப்பட்டும் குற்றஞ்சாட்டப்பட்டும், வழக்குத் தொடரப்பட்டும், குற்றவாளியாகக் காணப்பட்டும் உள்ள அனைத்து கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமை மேலும் மோசமடையும். ஏனெனில், சிறுபான்மையினர் மத்தியில் பல்வேறு விடயங்களில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளமையால் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்’ அவர் தனது அறிக்கையில் மேலும் கோரியுள்ளார்.