தமிழ் அரசியல் கைதிகள், இன்று உண்ணாவிரதத்தில் குதித்தனர்

எவ்விதமான விசாரணைகளும் இன்றி, சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், இன்று திங்கட்கிழமை(08), அடையாள உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு கையளிக்குமாறு கடிதமொன்றையும் கடந்த சனிக்கிழமையன்று அனுப்பிவைத்துள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பியும் நாடாளுமன்ற குழுக்;களின் பிரதி அவைத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், சனிக்கிழமையன்று (06) சந்தித்துப் பேசினார்.

இதன்போதே, அரசியல் கைதிகளால், மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டு கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘ஐயா, எவ்விதமான விசாரனைகளும் இன்றி பல வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளான தங்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலைச் செய்ய வேண்டும். அல்லது பிணையில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எமது விடுதலை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக கூட்டமைப்பானது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரைச் சந்தித்து தமது விடுதலை குறித்து வலியுறுத்தவேண்டும்.

கடந்த 2015.10.18 அன்று எம்மால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தையடுத்து எம்மை நீங்கள் சந்தித்தீர்கள். அப்போது, நான் ஜனாதிபதியை நம்புகின்றேன். நீங்களும் ஜனாதிபதியை நம்புங்கள். நிச்சயம் நான் உங்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுத் தருவேன் என வாக்குறுதியை அளித்தீர்கள் எமது உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தீர்கள்.

ஆனால், தங்களால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளின் படி கைதிகளின் விடுதலை தொடர்பாக இதுவரையிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு காலத்தை தாமதிக்கும் செயற்பாட்டின் ஊடாக நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றோம்.

8- 15 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எம்மைச் சட்ட நடவடிக்கை அல்லது விசேட நீதிமன்றம் அமைத்து விடுதலை செய்வது என்பது காலத்தை இழுத்தடித்து எம்மைப் பழிவாங்கும் ஒரு செயற்பாடாகவே எம்மால் உணரமுடிகிறது.

விசேட நீதிமன்றம் என்பது தங்களையும், தமிழ் மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றும் ஒரு தந்திரமான செயற்பாடாகும்.

மேலும், தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்பது தாங்கள் அறியாதது ஒன்றல்ல.

எனவே, இவ்வாறான செயற்பாடுகளினால் தாமதம் அடைந்து கொண்டு செல்லும் எமது விடுதலை தொடர்பில் அதிக கரிசணை கொண்டு விரைவான தீர்வை பெற்றத் தர வலியுறுத்தி முதல் கட்டமாக 08.08.2016 அன்று (இன்று) அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளோம்.

இந்த நாட்டில் ஓர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதிலும் எந்தவொரு மாற்றமும் தென்படவில்லை. அரசாங்கம் மாறியுள்ளது அதன் தலைவர் மாறியுள்ளார். ஆனால், அரச இயந்திரம் மாறமல் உள்ளதை தாங்களும் அறிவீர்கள் என நம்புகின்றோம்.

மேலும், எமது விடுதலை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளின் ஊடாக இதனை நன்கு உணரமுடிகின்றது.

அவை பின்வருமாறு,

தமிழ்ப் பிரதேச நீதிமன்றங்களில் உள்ள எமது வழக்குகளை சிங்களப் பிரதேசங்களுக்கு மாற்றுவது, நீண்டகாலமாக தடுத்து வைத்துவிட்டு புதிய புதிய வழக்குகளை தாக்கல் செய்வது, 3- 4 மாதங்கள் என்ற அடிப்படையில் காலத்தை இழுத்தடிப்பது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள், பயங்கரவாத விசாரணைப்பிரிவு அதிகாரிகள் என்போர் தொடர்ந்தும் முன்னைய அரசாங்க தலைவரினதும், கோட்டபாய ராஜபக்ஷவின் கையாளாகவும் செயற்படுகின்றமை என்பன நடைபெற்று வருகின்றன.

உண்மையான நல்லிணக்கம் தமிழ் மக்களின் மனங்களை வெல்வதே ஆகும். எனவே, எமது விடுதலை என்பது மேற்கொள்ளப்படாது வெறுமனே வாயால் கூறிக் கொண்டிருப்பது நல்லிணக்கத்துக்கான அறிகுறி அல்ல.

மேற்கூறிய விடயங்களினை கவனத்தில் எடுத்து எமது விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.