தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தில் உள்ளடக்கப்படவில்லை – வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர்

சமஸ்டி பெற்றுத் தருவோம் என்று மக்களிடம் ஆணை பெற்றவர்கள் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையினால் வெளியிடப்பட்ட பிரேரணையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற வாசகத்துடன் திருப்தியடைந்து மௌனமாக இருப்பது ஏன் என வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரை 16 இல் இலங்கை அரசு தீர்வு விடயத்தில் அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற வாசகத்தை தவிர தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாக வேறு எதையும் பரிந்துரை செய்யவில்லை.

“அவலை நினைத்துக் கொண்டு உரலை இடித்தது போல்” தமிழ் மக்களின் பிரச்சனையை சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்வோம் என்று கூறியவர்கள் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதே தமிழ் மக்களின் தீர்வாக அமையுமென்று சர்வதேசம் பரிந்துரை செய்யும் போது ஏன் மௌனமாக இருக்கின்றார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இந்தியாவின் பிரதிநிதி உரையாற்றும் போது 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று மேலும் அதனை செழுமைப்படுத்த வேண்டுமென்று கூறியிருந்தாலும், அந்த வார்த்தை பிரயோகம் பிரேரணையில் உள்வாங்கப்படவில்லை.