திமிங்கிலங்கள் கரையொதுங்குவதில் துலங்கும் மர்மங்கள்!

தென்னிந்தியாவின் தூத்துக்குடி மாவட்டத்தின் சில கரையோரப் பிரதேசங்களில் இவ்வருடம் (2016) ஜனவரி மாதத்தின் நடுப் பகுதியில் சுமார் 300 திமிங்கிலங்கள் கரையொதுங்கியதும், அவற்றில் பெரும்பாலானவை உயரிழிந்ததும் மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரித்தை ஏற்படுத்தின. கடல் வாழ் உயிரினமான திமிங்கிலத்திற்கு என்ன நேர்ந்தது என்று பரவலாகப் பார்க்கப்பட்டதோடு இவ்வாறு உயிரிழந்த திமிங்கிலங்களின் உடல் பாக மாதிரிகள் பிரித்தெடுக்கப்பட்டு ஆய்வுகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறான சூழலில் திமிங்கிலங்கள் தொடர்பாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. திமிங்கிலங்கள் கரையொதுங்கியதும் உயிரிழந்ததும் இப்பிராந்தியத்திற்கு அண்மைக் காலத்தில் இடம்பெற்ற புதிய நிகழ்வு தான். என்றாலும் திமிங்கிலங்கள் கரையொதுங்குவதும் உயிரிழப்பதும் ஆயிரக்கணக்கான வருடங்களாக இடம்பெற்று வரும் ஒரு விடயம். இற்றைக்கு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த அரிஸ்டோட்டில் கூட தமது குறிப்பொன்றில், இது தொடர்பாக எழுதி வைத்துள்ளார் என்று தென்னிந்திய நியூட்டன் அறிவியல் கழகத் தலைவர் இளங்கோ சுப்ரமணியன் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் நியூசிலாந்து. அவுஸ்திரேலியா, தாய்வான் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளின் கரையோரப் பிரதேசங்களில் அவ்வப்போது திமிங்கிலங்கள் கரையொதுங்குவதும் உயிரிழப்பதும் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பாக நிறையப் பதிவுகளும் உள்ளன.

திமிங்கிலங்கள் இவ்வாறு கரையொதுங்கும் நிகழ்வுகளில் 60 வீதமானவை நியூசிலாந்து, தஸ்மேனியா மற்றும் வட கடல் பகுதி ஆகிய மூன்று கரையோரப் பிரதேங்களில் தான் இடம்பெறுகின்றன. இங்கு வட கடல் பகுதி என்பது ஒரு புறம் பிரித்தானியாவையும் ஸ்கொட்லாந்தையும் மறுபறம் நோர்வேயையும் டென்மார்க்கையும் சூழ்ந்த கடல் பகுதியாகும்.

அதன்படி 2013 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையில் 51 திமிங்கிலங்கள் கரையொதுங்கி உள்ளன. அவற்றில் 22 திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளன. இதேபோன்று கலிபோர்னிய கரையோரத்திலும் ஏற்கனவே திமிங்கிலங்கள் கரையொதுங்கி இருக்கின்றன.

இதேபோன்று 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் நியூசிலாந்தின் கடற்கரையில் 198 திமிங்கிலங்கள் கரையொதுங்கின. அவற்றில் 100 திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளன. அதிலும் வருடமொன்றுக்கு 80க்கும் மேற்பட்ட தடவைகள் நியூசிலாந்தில் திமிங்கிலங்கள் கரையொதுங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தென்னிந்தியாவின் தூத்துக்குடி மாவட்டக் கரையோரப் பிரதேசங்களில் பைலட் வகைத் திமிங்கிலங்கள் தான் கரையொதுங்கின. ஆனால் திமிங்கிலங்களில் காணப்படும் மற்றொரு வகையான ஸ்பெக்ட்ரம் திமிங்கிலங்களும் கரையொதுங்குவது குறித்தும் உயிரிழப்பது தொடர்பாகவும் பதிவுகள் உள்ளன.

பொதுவாகத் திமிங்கிலங்கள் கூட்டமாக வாழக் கூடிய பண்பைக் கொண்ட உயிரினமாகும். அது ஐநூறு ஆயிரம் என்றபடி கூட்டமாகவே காணப்படும் என்று கல்பிட்டியில் திமிங்கிலங்கள் பார்வையிடல் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்படியென்றால் திமிங்கிலங்களில் சில மாத்திரம் கரையொதுங்கி இவ்வாறு உயிரிழக்கக் காரணம் என்ன என்ற கேள்வி எழுகின்றது. இவ்வாறான நிலையில் தான் திமிங்கிலங்கள் கரையொதுங்குதல் மற்றும் உயிரிழப்பது தொடர்பாக சில காரணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது harmful algal bloom என்ற ஹேப் தொற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய நுண்ணுயிர்க் கிருமிகள் கூட்டமாகக் கடலில் படர்ந்து காணப்படும். இந்நோய்க் கிருமித் தொற்றுக்கு திமிங்கிலங்கள் உள்ளாகக் கூடியன. அவ்வாறு அவை நோய்த் தொற்றுக்கு உள்ளாகும் போது வழி தவறிச் செல்வதுடன் உயிரிழக்கவும் செய்கின்றன.

அந்த வகையில் 2015 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள பெர்டினாண்டோ கடற்கரையில் கரையொதுங்கி உயிரிழந்த திமிங்கிலங்களின் உடல் பாக மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்திய போது அவை microbilli virus என்ற ஒரு வகை நோய்க்கிருமித் தொற்றுக்கு உள்ளாகி இருந்தது கண்டறியப்பட்டது.

அதேநேரம் கடலில் கூட்டமாக வாழும் இத்திமிங்கிலங்கள் உணவு தேடியும் கூட்டமாகவே செல்லக் கூடியன. இவ்வாறு உணவு தேடிச் செல்லும் திமிங்கிலங்களுக்கு வழிகாட்டி முன் செல்லும் திமிங்கிலம் திசை மாறி விடுமாயின் அதைப் பின் தொடர்ந்து செல்லும் திமிங்கிலங்களும் வழி தவறிச் சென்று கரையொதுங்குவதும் உண்டு.

இவை இவ்வாறிருக்க ,எல்நினோ விளைவு காரணமாக கடல் நீரோட்டங்களில் ஏற்படும் மாற்றங்களும் திமிங்கிலங்கள் வழிதவறி கரையொதுங்கச் செய்கின்றன.

இதேநேரம் பசுபிக் சமுத்திரத்தில் சில எரிமலைகள் கொதிநிலையில் இருப்பதும் திமிங்கிலங்கள் கரையொதுங்கக் காரணமாக அமைவதாக சமுத்திரவியல் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

என்றாலும் உலகிலுள்ள மிகப் பெரிய உயிரினமான திமிங்கிலங்களைப் பாதுகாப்பதற்கு தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கும் அப்பால் தான் அவை கரையொதுங்கவும் உயிரிழக்கவும் செய்கின்றன.அதனால் அவற்றைப் பாதுகாப்பது குறித்து மேலும் விரிவாக்க் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு மனித சமூகத்திற்கு உள்ளது என்றால் அது மிகையாகாது.

(மர்லின் மரிக்கார்)