தியாகிகள் தினம் யாழ்பாணத்தில்

தமிழ் இனத்தின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், சக அமைப்புக்கள், மக்களுக்கு மறுக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவும் ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமூக சமத்துவத்திற்காகவும், மக்களின் விடிவிற்காகப் போராடிய சக்திகளிடையே ஐக்கியத்திற்காகவும்

அமரர் தோழர் பத்மநாபாவின் தலைமைத்துவத்தின் கீழ் தோளோடு தோள்நின்று போராடியும், ஆதரவு நல்கியும் தம் உயிரை அர்ப்பணித்த தோழர்கள், ஆதரவாளர்களையும் மேற்படி இலட்சியங்களோடு செயற்பட்ட சக இயக்கங்களின் போராளிகள், பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், தனிநபர்கள் என அனைவரையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் 28 வது தியாகிகள் தினம், புங்கங்குளம் சந்தி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி அலுவலகத்தில் இன்று (30.06.2018) நடைபெற்றது.

தோழர் மோகன் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் தோழர் முத்து, அத்துடன் செம்மண் பிரதேசத்தில் இடம்பெற்ற கூலி உயர்வுப் போராட்டங்களில் எம்மோடு முன்நின்று செயற்பட்ட, அண்மையில் காலஞ்சென்ற அவரது தாயார் பூமணி ஆகியோர் சார்பாக அமரர் பூமணியின் புதல்வி தியாகிகள் தின சுடரை ஏற்றிவைத்தார்.

கட்சியின் மூத்த தலைவர் தோழர் அ. வரதராஜப்பெருமாள், தனது குடும்பத்தில் 4 பேரை இழந்து நிற்கும் செ. பொன்னுத்துரை ஆகிய இருவரும் தியாகிகளின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தனர். இதனை தொடர்ந்து உயிர்நீத்த தோழர்களின் பெற்றோர், உறவினர்கள் தியாகிகளின் உருவப்படங்களுக்கு தீபம் ஏற்றியும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

தோழர் யோகராசா சுண்ணாகம், தோழர் கண்ணன், யாழ் மாநகரசபை உறுப்பினர் இரா. செல்வவடிவேல், தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் தோழர் சுகு (தி. ஸ்ரீதரன்) கட்சியின் மூத்த தலைவரிகளில் ஒருவரான தோழர் அ.வரதராஜப்பெருமாள் ஆகியோர் உரையாற்றினர். காலை 10.00 மணிமுதல் நண்பகல் 1.30 மணிவரை நடைபெற்ற அஞ்சலி நிகழ்வு தோழர் கங்கா அவர்களின் நன்றியுரையுடன் நிறைவெய்தியது.