தீர்வு எம் கையில் இருக்கிறது – பிரதமர் ரணில்

உள்நாட்டு நீதிமன்ற பொறிமுறையில் அமையக்கூடிய விசாரணை முறைமையை இலங்கை அரசாங்கம் விரும்புகிறது. அதனை முன்னெடுப்பதற்கு வெளிநாட்டில் இருக்கின்ற சட்டத்துறை நிபுணர்களின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நீதிமன்ற பொறிமுறையின் கீழ், அடிப்படை நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இருக்கின்றன. அவற்றின் ஊடாக, காணாமல் போனவர்களின் பிரச்சினைகளுக்கு கூடியவிரைவில் தீர்வு காணமுடியும். அவ்வாறு செய்யாவிடின் அது பாரிய காயமாகிவிடும் என்றும் அவர் கூறினார். இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச வரைபு தொடர்பில் நாட்டில் பல்வேறுபட்ட குழப்பநிலை தோன்றியிருக்கிறது. சில அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் இவ்விவகாரத்தினை திரிவுபடுத்தி வெளியிடுகின்றனர். ஆகையினால் இது தொடர்பில் விளக்கமளிப்பது காலத்தின் கடமையாகும்.

சர்வதேசம் எம்மீது திணிப்புக்களைப் பிரயோகிக்கவில்லை. மாறாக, எமக்கான உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறார்கள். சர்வதேச நீதித்துறை வல்லுநர்களை இந்த விசாரணைப் பொறிமுறைக்குள் எவ்வாறு உள்வாங்குவது என்பது தொடர்பில் நாங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். சர்வதேசத்தின் பிரதிநிதிகள் பார்வையாளர்களாக இருக்க விரும்பினால் நாங்கள் அதற்கு தடைவிதிக்கப்போவதில்லை. ஆனால், அந்தப் பிரதிநிதிகளை எவ்வாறு, எங்கு பயன்படுத்த வேண்டுமென்ற இறுதித் தீர்மானத்தினை மேற்கொள்கின்ற அதிகாரம் இலங்கை அரசாங்கமாகிய எங்களுக்குத்தான் இருக்கிறது. எனவே, இவ்விடயத்தில் எவரும் குழப்பமடையத் தேவையில்லை.

தங்களின் சுயலாபங்களுக்காக பலரும் பல விடயங்களைப் போட்டுக் குழப்பிக்கொள்கிறார்கள். முன்னைய அரசாங்கத்தில் இருந்தவர்கள் தேவையற்ற வாக்குறுதிகளை சர்வதேசத்துக்கு வழங்கி, அதனை நடைமுறைப்படுத்தாமல் போனமையால்தான் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகியிருக்கின்றன. ஆகையினால், எமக்குக் கிடைத்திருக்கும் இறுதிச் சந்தர்ப்பத்தினைச் சரியான முறையில் பயன்படுத்துவதற்கு நாம் முனைப்புடன் செயற்படவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. அதனைச் சரியான கோணத்தில் நாங்கள் அணுகுவோம்’ என்று குறிப்பிட்டார்.

மனித உரிமை பேரவையில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, கடந்த மார்ச் மாதம் யோசனையொன்றை முன்வைக்கவிருந்தது. எனினும், எமது காலக்கெடு கோரிக்கைக்கு இசைந்து செப்டெம்பர் வரை அதனை பிற்போட்டிருந்தது.
மார்ச் மாதத்தில் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தால் பொருளாதார தடை விதிக்கப்பட்டிருக்கும். பொருளாதாரம் இன்றி பயணிக்க முடியாது. மேற்குலக பொருளாதாரம் சீர்குலைந்த போது சீனா உதவியளித்தது. பொருளாதார தடை விதிக்கப்பட்டிருந்தால் நாங்கள் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்திருப்போம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளின் ஜனநாயகத்தை ஸ்தாபித்து , பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு காலக்கெடு கேட்டிருந்தோம்.

அந்த காலக்கெடு நிறைவில், நாங்கள் என்ன செய்யபோகின்றோம் என்பதை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மனித உரிமை பேரவையில் அறிவித்திருந்தார்.

ஜனநாயக வியூகத்தை அர்ப்பணிப்பின் ஊடாக மீண்டும் ஸ்தாபித்தல், நாடாளுமன்றத்தின் ஊடாக புதிய அரசியலமைப்பு உருவாக்குதல் அதனூடாக அரசியல் தீர்வை பெற்றுக்கொடுத்தல் குறித்து தெளிவுப்படுத்தினோம்.

உள்ளூர் நீதிமன்றத்தின் ஊடாக பிரச்சினைக்கு தீர்வு காண்பது முக்கியமானதாகும். எம்மிடத்தில் போதியளவான சட்ட நிபுணர்கள் இன்மையால், இருக்கின்ற சிலரையும் உள்வாங்கிக்கொண்டே உள்ளூர் நீதிமன்ற பொறிமுறையை ஏற்படுத்த முடியும்.

அந்த பொறிமுறைக்கு மதத்தலைவர்களின் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்படும். அதற்கென மதத்தலைவர்கள் சபையொன்றும் ஸ்தாபிக்கப்படும். ஆணைக்குழுவின் யோசனைக்கு மதத்தலைவர் சபை அங்கிகாரமளிக்கவேண்டும்.
விசாரணை ஆணைக்குழு மற்றும் விசேட நீதிமன்றம் ஆகியவற்றின் ஊடாக இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படும். வழக்கு தாக்கல் செய்யவேண்டிய தேவை ஏற்படின் அவை நீதிமன்றத்தின் ஊடாக தீர்க்கப்படும் இல்லையே ஆணைக்குழுவின் ஊடாக தீர்க்கப்படும்.

அவற்றை அடிப்படையாக கொண்டுதான் காணாமல் போன்வர்களுக்கான காரியாலயத்தை ஸ்தாபிப்பது என்ற யோசனையையும் முன்வைத்தோம் இது எமது யோசனையாகும் என்றார்.
– See more at: http://www.tamilmirror.lk/155177#sthash.fOHn6Zlz.dpuf