தூக்கம் வராவிடின் வீட்டில் இருக்கவும் – சரத் பொன்சேகாவின் நாகரீகமற்ற பேச்சு

‘அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கே பொலிஸ் பாதுகாப்புத் தான் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு இராணுவம் இன்றித் தூக்கம் வராவிட்டால் அவர், வீட்டிலேயே இருந்து கொள்ளலாம்’ என்று அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (03), ஒன்றிணைந்த எதிரணியினால் எழுப்பப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்து உரையாற்றிய பின்னர், உரையாற்றும் போதே அமைச்சர் பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘பயங்கரவாதம் இருந்த காலத்தில், பொலிஸாரும் இராணுத்தினரும், அரசியல்வாதிகளைப் பாதுகாத்தனர். இன்று பயங்கரவாதம் இல்லை. ஆகையால், அரசியல்வாதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்’ என்றார்.

‘மஹிந்தவுக்குப் பாதுகாப்பு வழங்கியிருக்கும் கப்டன் நெவில் என்பவர், எவ்விதமான பயிற்சியையும் பெறாதவர். அவர், மஹிந்தவின் கைக்கூலியாகவே இருக்கின்றார். எனினும், கிருலப்பனை முட்டாள்கள் இங்கு கத்துகின்றனர்’ என்று ஒன்றிணைந்த எதிரணியைப் பார்த்து பொன்சேகா கூறினார்.

‘நான் இராணுவத்திலிருந்து விலகிய போதுஈ எனக்கு 20 இராணுவத்தினரையே பாதுகாப்புக்காக வழங்கினர். அவர்கள் அத்தனை பேரும் சாதாரண இராணுவத்தினராவர். நானோ, கொமாண்டோ படையினரையே பாதுகாப்புக்காகக் கேட்டிருந்தேன்.

பயங்கரவாதியுடனேயே நானிருந்தேன். சிறைச்சாலைக்குக் கொண்டுவரும் போதெல்லாம், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ரி-56 ரகத் துப்பாக்கிகள் இரண்டு மட்டுமே வழங்கப்பட்டிருந்தன. அதுவும் நான் தப்பிச் சென்றால் என்னைச் சுடுவதற்கே அவ்விரண்டு துப்பாக்கிகளும் வழங்கப்பட்டிருந்தன. அமைச்சரான எனக்கு, 15 பொலிஸாரே பாதுகாப்புக்கு வழங்கப்பட்டுள்ளனர். சாதாரண எம்.பி.யான மஹிந்த ராஜபக்ஷவுக்கு, கூடுதலான எண்ணிக்கையானோர் அதுவும் இராணுவத்தினர் கேட்பதில் நியாயமில்லை’ என்றும் அவர் கூறினார்.