தென்சூடானில் தாக்குதலொன்றில் ஆறு தொண்டுப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர்

தென்சூடான் தலைநகர் ஜுபாவிலிருந்து பிபோர் நகரத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது, கடந்த சனிக்கிழமை (25) இடம்பெற்ற தாக்குதலொன்றில், ஆறு தொண்டுப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாக, ஐக்கிய நாடுகள், நேற்று முன்தினம் (26) தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும், கொல்லப்பட்டவர்கள், ஐக்கிய நாடுகளுக்காகப் பணியாற்றினார்களா என்று ஐக்கிய நாடுகள் குறிப்பிட்டி -ருக்கவில்லையென்பதுடன், மேலதிக விவரங்கள் எதனையும் வழங்கியிருக்கவில்லை.

தென்சூடானில் 2013ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் சிவில் யுத்தம் ஆரம்பித்த பின்னர், தனியொரு சம்பவத்தில், உயர் எண்ணிக்கையான தொண்டுப் பணியாளர்கள் கொல்லப்பட்டமை, இந்தச் சம்பவத்திலேயாகும் என ஐக்கிய நாடுகளின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

சிவில் யுத்தம் ஆரம்பித்த பின்னர், குறைந்தது 79 தொண்டுப் பணியாளர்கள் கொல்லப்பட்டதுடன், இவ்வாண்டில் மாத்திரம் குறைந்தது 12 பேர் இறந்துள்ளதுடன், குறைந்தது எட்டு மனிதாபிமானத் தொடரணிகள் தாக்கப்பட்டுள்ளன.