தேவையற்ற விவாதங்களை தவிர்த்து விரைவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் – வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர்

எமது மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்யவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கச் செய்வதற்கு ஏற்றவகையில் சம்பந்தப்பட்டவர்கள் துரிதகதியில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலும் அவரது காரியாலயத்தினால் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலும் அவரது காரியாலயத்தினால் வெளியிட்ட அறிக்கையில் 2002, 2011 காலப்பகுதிகளில் யுத்தக்குற்றங்களும், மனிதநேயத்துக்கு எதிரான குற்றங்களும் பெரும்பாலும் இழைக்கப்பட்டிருப்பதாக கூறி இதற்கு ஒர் சிறப்பு கலப்பு நீதிமன்றத்தின் மூலம் விசாரணைகள் நடாத்தப்பட வேண்டுமென்று பரிந்துரை செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். போரினால் பாதிப்படைந்து நீதிகோரி நிற்கும் எம்மக்களது ஆதங்கத்திற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உயர்ஸ்தானிகரின் விசாரணை அறிக்கை அமைந்துள்ளது. தேவையற்ற விவாதங்களை தவிர்த்து கூடிய விரைவில் எமது மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்யவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கச் செய்வதற்கு ஏற்றவகையில் சம்பந்தப்பட்டவர்கள் துரிதகதியில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.