தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் படுகொலை: 10 ஆண்டுகளுக்கு பின்னும் கவலை

மூதூரில் வைத்து, தொண்டர் நிறுவன ஊழியர்கள் 17 பேரைப் படுகொலை செய்தவர்களை நீதிக்கு முன்னால் இலங்கை அரசாங்கம் நிறுத்தவில்லை என, மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது. ‘பசிக்கு எதிரான செயற்பாடு’ அக்ஷன் பார்ம் எனும் அரசசார்பற்ற தொண்டு நிறுவனத்தின் இலங்கை ஊழியர்கள் 17 பேர், 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதியன்று, அவர்களது வளவில் வைத்து துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

குற்றமிழைத்தவர்களின் பதவியைப் பாராது வகைகூற வேண்டும். யுத்தக் குற்றம் மற்றும் தொண்டர்களின் கொலை தொடர்பில் வெளிநாட்டுப் பங்களிப்புடன் கூடிய விசாரணை உரிய முறையில் நடப்பதை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிசெய்ய வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

தொண்;டு நிறுவன ஊழியர்களின் இந்தப் படுகொலைக்கு நீதி கிடைக்காமை, யுத்தத்தின் போது நடந்த கடும் குற்றச் செயல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதை உதாசீனம் செய்தமைக்கு முதல் சாட்சியாக இலங்கை உள்ளதென, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்டம் மற்றும் கொள்கை பணிப்பாளர் ஜேம்ஸ் றொஸ் கூறினார். யுத்தக் குற்ற நீதிமன்றத்துக்கு சர்வதேசத்தின் பங்கு ஏன் தேவை என்பதை, 17 தொண்டர்களின் கொலைகள் தொடர்பில், நடந்த விசாரணை முறை எடுத்துக் காட்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மூதூரைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தமிழீழ விடுதலைப் புலிகளும் இலங்கைப் படைகளும் பல நாள் யுத்தம் நடத்திய பின்னர், தமிழ் மற்றும் முஸ்லிம்களை உள்ளடக்கிய 16 தொண்டர்களின் கொலைகள் இடம்பெற்றன.

இந்தத் தொண்டர்கள், 2004 ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிக் கொண்டிருந்த போதே கொல்லப்பட்டனர்.

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைக்கான சங்கம், தனது ஆய்வின் அடிப்படையில், அவ்விடத்தில் காணப்பட்ட அரச படையினரே இக்குற்றத்தை இழைத்ததாகக் கூறியிருந்தது.

இதில் பொலிஸ் கான்ஸ்டபிள்களும் இலங்கை கடற்படையின் விசேட படையினரும் நேரடியாகக் பங்கேற்றதாகவும் இச்சம்பவத்தை மூடிமறைப்பதற்காக பொலிஸ் அதிகாரிகளும் நீதித்துறை அதிகாரிகளும் உதவியதாக சங்கம் கூறியிருந்தது.

பெரும் மனித உரிமைகள் சம்பவங்கள் 16ஐ விசாரிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜூலை 2007 இல், ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்திருந்தார்.

எனினும், விசாரணையைச் சரியாக நடத்த முடியாது இருப்பதாகக் கூறி சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் விலகிவிட்டனர்.

இறுதியாக இந்த விசாரணை ஆணைக்குழு, குற்றவாளிகளை இனங்காணப் போதிய சாட்சியங்கள் இல்லையெனக் கூறி, வழக்கிலிருந்து, இராணுவ மற்றும் கடற்படையினரை விடுவித்தது.

சர்வதேச அழுத்தங்கள் காரணமாக ராஜபக்ஷ அரசாங்கம், இந்த வழக்கை மீண்டும் எடுக்குமாறு அரச சட்டவுரைஞர் மற்றும் புலனாய்வாளர்களுக்கு, ஜூலை 2013இல் பணித்தது. ஆனால், அதன் பின்னரும் எதுவும் நடைபெறவில்லை. சாட்சியங்கள் இன்றிக் கிடந்த வழக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் புதுப்பித்து, சாட்சியங்களைக் கொண்டுவரும் முயற்சிகளை எடுத்தது. அது, வெளிநாட்டிலிருந்த வண்ணமே சாட்சியம் அளிக்க அனுமதிப்பதாகத் தெரிவித்துள்ளது.

சிறிசேன அரசாங்கம், நாட்டில் மனித உரிமைகள் பிரச்சினையைக் கையாள முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளபோதும், மனித உரிமைகள் பேரவையில்; ஒக்டோபர் 2015இல் ஒப்புக்கொண்ட கடப்பாடுகள் நிறைவேற்றப்படாமலே உள்ளன.

யுத்தக் குற்றங்களை விசாரிப்பதற்கான நீதிமுறைமையில், ஒத்துக்கொண்ட விடயங்களை அரசாங்கம் மறுத்து வருகின்றது.

வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கு நடத்துநர், விசாரணையாளர்கள், வழக்குரைஞர் 2015 ஒக்டோபர் தீர்மானம் என்பவற்றை வலியுறுத்தியிருந்தது.

சர்வதேசப் பங்களிப்புடன் கூடிய விசாரணை மன்றை உருவாக்குவதாகக் கூறிய அரசாங்கத்தின் கூற்றுக்கும் வேறு சில அதிகாரிகளின் முரண்பாடான கருத்துக்கும் இடையேயுள்ள இடைவெளி, உண்மையான முன்னேற்றத்துக்கு தடையாக உள்ளது.

நீதிப் பொறிமுறையில் சர்வதேசப் பங்களிப்புக்கு இடமில்லை என ஜனாதிபதி மறுத்து வருகின்றார். ஆனால் மனித உரிமைகள் பேரவையில், ‘ஜெனீவா தீர்மானத்துக்கான எமது கடப்பாடு மாறவில்லை’ என்று அமைச்சர் மங்கள சமரவீர கூறினார்.

பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வெளிநாட்டுப் பங்குபற்றுதலைச் சில தரப்பினர் கோருகின்றனர். இவற்றை அவதானிக்கும் போது அரசாங்கம், ஜெனீவாக் கட்டுப்பாட்டுக்கு அமைய நடந்து கொள்ளும் எனத் தீர்மானிக்க முடிகின்றது.

அரசாங்கம், அதன் சர்வதேச வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வேறு ஆட்களின் பங்குபற்றலுடன் முன்னேற வேண்டும் என றொஸ் கூறினார்.பட்டினிக்கு எதிரான அமைப்பின் கொலையுண்ட 17 பணியாளருக்கும் வேற பாதிக்கப்பட்டோருக்கும் உண்மையான நீதி கிடைக்கும் என நம்புமளவுக்கு நீதி முறை அமைய வேண்டும் என அவர் கூறினார்.