தோழர் தா பாண்டியன் எம்மை விட்டுப் பிரிந்தார்

அவரின் மரணச் செய்திக்கு முன்பு ரதனின் cணர்வலையில்லிருந்து…

தோழர் தா.பாண்டியன் கடும் உடல்நலக்குறைவால்
ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியை
காலை தினத்தந்தி சொன்னதிலிருந்து
மனம் புரண்டு புரண்டு சுழன்றுகொண்டிருக்கிறது.
சிகிச்சையே வாழ்க்கையென்றானபிறகும்கூட,
வீட்டில் ஓய்வெடுக்காமல், மூளைக்கும் அமைதிகொடாமல், சொற்பொழிவுகள், நேர்காணல்கள், எழுத்துப்பணிகளென்று நேற்றுவரை தமிழகம் முழுதும் சுற்றிச்சுற்றி கட்சிப் பணியாற்றிக்கொண்டிருந்தார் தாபா.

பலரும் அறியாச் சேதி ஒன்றுண்டு.
சில்லாண்டுகள் முன்னர், சிறுநீரக சிகிச்சைக்காக
இதே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த
தாபாவை நலம் விசாரிக்கச் சென்ற
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்,
அரசு செலவில், பெரும் தனியார் மருத்துவமனைகளிலோ,
அல்லது, வெளிநாட்டிலோ சிகிச்சை பெற ஏற்பாடு செய்வதாகக் கோரியபோது அதை அன்புடன் மறுத்தார் தாபா. எளியமக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனையிலேயே
தானும் சிகிச்சை பெற விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
அதையே இன்றுவரையிலும் தொடருகிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு
தாபாவின் பங்களிப்பு என்ன?
முதன்மையானதாக நான் கருதுவது இதைத்தான்.
1970-80களில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை
தன் வசீகரச் சொல்லாற்றல் மூலம் கட்சிக்குள் ஈர்த்த
ஒரே தலைவர் தா.பாண்டியன்தான்.
அவர் மட்டும்தான்.
அந்தப் பெருமை அவருக்கே உரித்தானது.
தாபாவுக்கு பின்னர் அது நிகழவேயில்லை.

முன்னர், தோழர் ஜீவாவும், தோழர் பாலன் என்று தோழமையுடன் விளிக்கப்பட்ட கே.பாலதண்டாயுதமும் அத்தகைய
திறன் பெற்றவராயிருந்தார்.
தாபாவின் மற்ற பங்களிப்புகளை விடுத்து, இதனை
முதன்மையாகக் குறிப்பிடுவதில் காரணிகள் உள.
அவரால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள்
வேறேதும் பாதை பிறழாமல்,
பொதுவுடமைக் கோட்பாட்டின் இலட்சியங்களுக்காக
இன்றளவும் தொடர்ந்து உழைத்தே வருகின்றனர்
என்பதே ஒரு பேராதாரம்.
நலம் பெற்று, ஓய்வு கொள்க என்பதே
எனது விழைவும் வேண்டுகோளும்.