நியூசிலாந்தை வென்று முதன்முறையாக சம்பியனான கிரிக்கெட்டின் தாயகம்

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்தின் அணித்தலைவர் கேன் வில்லியம்சன், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார். இரண்டு அணிகளிலும் மாற்றமெதுவும் இருந்திருக்கவில்லை.

அந்தவகையில், முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, ஆரம்பத்திலேயே தமது ஆரம்பத் துடுப்பாட்டவீரர் மார்டின் கப்திலை கிறிஸ் வோக்ஸிடம் பறிகொடுத்தது.

இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த மற்றைய ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ஹென்றி நிக்கொல்ஸ், கேன் வில்லியம்ஸன் ஆகியோர் நியூசிலாந்தின் இனிங்ஸை நகர்த்திக் கொண்டு சென்றபோது, குறிப்பிட்ட இடைவேளையில் இருவரினது விக்கெட்டுகளையும் லியம் பிளங்கெட் கைப்பற்றினார்.

இதையடுத்து, றொஸ் டெய்லர், ஜேம்ஸ் நீஷம் என சீரான இடைவேளைகளில் மார்க் வூட், பிளங்கெட்டிடம் விழ, டொம் லேதம் பெற்ற 47 (56) ஓட்டங்களால், கொலின் டி கிரான்ட்ஹொமும் அவரும் கிறிஸ் வோக்ஸுடம் விக்கெட்டுகளை பறிகொடுத்தபோதும் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்டு 241 ஓட்டங்களை நியூசிலாந்து பெற்றது.

பதிலுக்கு, 242 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, ஆரம்பத்திலேயே தமது ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ஜேஸன் றோயை மற் ஹென்றியிடம் பறிகொடுத்ததுடன், தொடர்ச்சியாக சீரான இடைவேளைகளில் கட்டுக்கோப்பாக பந்துவீச்சிய கொலின் டி கிரான்ட்ஹொம், லொக்கி பெர்கியூசன், ஜிம்மி நீஷமிடம் ஜோ றூட், மற்றைய ஆரம்பத் துடுப்பாட்டவீரர் ஜொனி பெயார்ஸ்டோ, அணித்தலைவர் ஒய்ன் மோர்கன் ஆயோரை இழந்து 23.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 86 ஓட்டங்களைப் பெற்றத் தடுமாறியது.

இந்நிலையில், அடுத்து ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ், ஜொஸ் பட்லரின் சத இணைப்பாட்டத்தில் வெற்றியிலக்கை நோக்கி நகர்ந்தபோதும், ஜொஸ் பட்லரின் விக்கெட்டை பெர்கியூசனிடம் பறிகொடுத்து, வோக்ஸும் அவரிடமே விக்கெட்டை பறிகொடுத்ததுடன், பிளங்கெட், ஆர்ச்சரின் விக்கெட்டுகளை நீஷம் கைப்பற்றிய நிலையில், ட்ரெண்ட் போல்ட் வீசிய இறுதி ஓவரில் 15 ஓட்டங்கள் தேவைப்பட்டநிலையில், 14 ஓட்டங்களை ஸ்டோக்ஸ் பெற்ற நிலையில் போட்டி சுப்பர் ஓவருக்குச் சென்றது.

சுப்பர் ஓவரில் முதலில் இங்கிலாந்து துடுப்பெடுதாடிய நிலையில், போல்ட் வீசிய ஓவரில் பென் ஸ்டோக்ஸ், ஜொஸ் பட்லர் ஆகியோர் 15 ஓட்டங்களைப் பெற்றனர். அந்தவகையில், 16 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு ஆர்ச்சர் வீசிய ஓவரில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்தின் மார்டின் கப்திலும், ஜிம்மி நீஷமும் 15 ஓட்டங்களைப் பெற்று சுப்பர் ஓவரும் சமமான நிலையில், இப்போட்டியில் நியூசிலாந்தின் 17 நான்கு, ஆறு ஓட்டங்களை விட ஏழு நான்கு, ஆறு ஓட்டங்கள் அதிகமாக 24 நான்கு, ஆறு ஓட்டங்களைப் பெற்ற இங்கிலாந்து சம்பியனானது.

இப்போட்டியின் நாயகனாக ஸ்டோக்ஸ் தெரிவானநிலையில், 82.57 என்ற சராசரியில் எட்டுப் போட்டியில் இரண்டு சதங்கள், இரண்டு அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 578 ஓட்டங்களைப் பெற்றதுடன், நியூசிலாந்தை சிறப்பாக இறுதிப் போட்டி வரை வழிநடத்திய கேன் வில்லியம்சன் தொடரின் நாயகனாக தெரிவானார்.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: நியூசிலாந்து

நியூசிலாந்து: 241/8 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹென்றி நிக்கொல்ஸ் 55 (77), டொம் லேதம் 47 (56), கேன் வில்லியம்சன் 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: கிறிஸ் வோக்ஸ் 3/37 [9], லியம் பிளங்கெட் 3/42 [10], ஜொவ்ரா ஆர்ச்சர் 1/42 [10], மார்க் வூட் 1/49 [10])

இங்கிலாந்து: 241/10 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: பென் ஸ்டோக்ஸ் ஆ.இ 84 (98), ஜொஸ் பட்லர் 59 (60), ஜொனி பெயார்ஸ்டோ 36 (55) ஓட்டங்கள். பந்துவீச்சு: லொக்கி பெர்கியூசன் 3/50 [10], ஜிம்மி நீஷம் 3/43 [7], கொலின் டி கிரான்ட்ஹொம் 1/25 [10], மற் ஹென்றி 1/40 [10])

சுப்பர் ஓவர்:

இங்கிலாந்து: 15/0 (1 ஓவ. ) (துடுப்பாட்டம்: பென் ஸ்டோக்ஸ் ஆ.இ 8 (3), ஜொஸ் பட்லர் ஆ.இ 7 (3) ஓட்டங்கள் பந்துவீச்சு: ட்ரெண்ட் போல்ட் 0/15)

நியூசிலாந்து: 15/0 (1 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஜிம்மி நீஷம் ஆ.இ 13 (5) மார்டின் கப்தில் 1 (1) ஓட்டங்கள் பந்துவீச்சு: ஜொவ்ரா ஆர்ச்சர் 0/15)

போட்டியின் நாயகன்: பென் ஸ்டோக்ஸ்

தொடரின் நாயகன்: கேன் வில்லியம்சன்