நீதி மறுக்கப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலை – இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவு

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2000ஆம் ஆண்டு, ஒக்ரோபர் 19ஆம் நாள் இரவு 10 மணியளவில் யாழ்ப்பாண நகரின் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாக அப்போது இருந்த, கச்சேரியடிப் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து அவர் படுகொலை செய்யப்பட்டார். அன்று மாலையில், நாகர்கோவிலில் சிறிலங்கா விமானப்படை உலங்குவானூர்தி விடுதலைப் புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்ட செய்தியை பிபிசி தமிழோசைக்கு தொலைபேசி மூலம் வழங்கி விட்டு, வீரகேசரி நாளிதழுக்காக தொலைநகலில் அனுப்புவதற்காக அந்தச் செய்தியை எழுதிக் கொண்டிருந்த போதே, அவரது வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் அவரைச் சுட்டுப்படுகொலை செய்தனர்.

அதையடுத்து, அவரது வீட்டுக்குள் கைக்குண்டை வீசிவிட்டுச் சென்றதில், நிமலராஜனின் தந்தை, தாய், மருமகன் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்தப் படுகொலைக்கு ஈபிடிபியே காரணம் என்றும் குற்றம்சாட்டப்பட்ட போதிலும், சிறிலங்கா அரசாங்கத்தில் அப்போது இடம்பெற்றிருந்த ஈபிடிபியினருக்கு எதிராக முறையான விசாரணைகள் ஏதும் நடத்தப்படவில்லை.

பிபிசி தமிழோசை, ஹிரு எவ்எம், சூனியன் எவ்எம் வானொலிகளுக்கும், வீரகேசரி, ராவய, ஆதவன் இதழ்களுக்கும் செய்தியாளராளராக யாழ்ப்பாணத்தில் இருந்து பணியாற்றியிருந்தார் நிமலராஜன்.யாழ்ப்பாணம் சிறிலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் வந்த பின்னர், அங்கு இடம்பெற்ற சிறிலங்கா படைகளின் அட்டூழியங்கள் குறித்தும், தீவகத்தில் ஈபிடிபியினரின் முறைகேடுகள் குறித்தும் வெளியுலகிற்கு அம்பலப்படுத்தி வந்தார்.

மயில்வாகனம் நிமலராஜன் ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்யப்பட்டு, 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. ஆனாலும், இந்தப் படுகொலை குறித்த முறையான விசாரணைகள் நடத்தப்படவோ, குற்றவாளிகள் தண்டிக்கப்படவோ இல்லை. மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை குறித்த விசாரணைகளின் மீது சிறிலங்கா அரசாங்கம் கடைப்பிடித்த மெத்தனப்போக்கு, பிற்காலத்தில், இன்னும் தமிழ் ஊடகவியலாளர்கள் பலரும் படுகொலை செய்யப்படுவதற்கு ஊக்குவிப்பாக அமைந்திருந்தது.

பல்வேறு படுகொலைகள் குறித்த விசாரணைகளை சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற போதிலும், நிமலராஜன் படுகொலை குறித்த விசாரணைகள் ஏதும், ஆரம்பிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதினப்பலகை.கொம்