‘பரியேறும் பெருமாள்’ படத்துக்கு தேசிய விருது இல்லையா? – இயக்குநர்கள் காட்டம்

இந்த விவகாரம் தொடர்பாக பல திரையுலக பிரபலங்கள் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக ‘பரியேறும் பெருமாள்’ படத்துக்கு தேசிய விருது கிடைக்காதது பல இயக்குநர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இது தொடர்பாக ‘குற்றம் கடிதல்’, ‘மகளிர் மட்டும்’ படங்களின் இயக்குநர் பிரம்மா தனது ட்விட்டர் பதிவில், ” ’பரியேறும் பெருமாள்’ படத்திற்குக் கிடைக்காமல் போன தேசிய அங்கீகாரம், தேசத்துக்கான இழப்பு மட்டுமே. சாதி மறுப்பு பேசும் கலை-இலக்கிய வரலாற்றில் பரியேறும் பெருமாளை எவராலும் மறக்கவோ, அழிக்கவோ, மறுக்கவோ முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

பிரம்மாவின் ட்வீட்டை மேற்கொளிட்டு ‘மேற்குத்தொடர்ச்சிமலை’ இயக்குநர் லெனின் பாரதி தனது ட்விட்டர் பதிவில் “கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே…. அந்தவகையில் ‘பரியேறும் பெருமாள்’ தேசிய, உலக விருதுகளையெல்லாம் தாண்டிய உயரிய, உண்மையான விருதான மக்கள் விருதை எப்போதோ பெற்றுவிட்டது. இன்னும் பெற்றுக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

‘குற்றம் கடிதல்’ மூலம் சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதினை வென்றவர் பிரம்மா என்பது குறிப்பிடத்தக்கது.