பஸ் கட்டண உயர்வு: முதல்வர் வீட்டை முற்றுகையிட முயன்ற மாணவர் அமைப்பினர் கைது

பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து முதல்வர் செல்லும் பாதையில் முற்றுகைப் போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். ஊதிய உயர்வு, பணப்பலன் நிலுவை, ஓய்வூதிய நிலுவை உள்ளிட்ட பல கோரிக்கைகள் வைக்கப்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்த வேலை நிறுத்தம் நீதிமன்ற தலையீட்டின் பேரில் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் போராட்டம் முடிந்த சில நாட்களிலேயே பேருந்து கட்டணத்தை தமிழக அரசு அதிரடியாக உயர்த்தியது. 67 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

பேருந்து கட்டண உயர்வுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தனர். சாதாரண ஏழை மக்களின் வருமானத்தில் 30 சதவீதததை பேருந்து கட்டண உயர்வு மூலம் பறித்த தமிழக அரசின் முடிவை எதிர்த்து மாணவர்கள் பொதுமக்கள் கடுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் மாணவர் அமைப்பினர் முதல்வர் எடப்பாடி இல்லத்தை முற்றுகையிட முயன்றனர்.

அவர்களைப் பிடிக்க போலீஸார் கடுமையாக முயன்றும் முடியாமல் போனது. 100 மீட்டருக்கு மேல் போலீஸார் துரத்திச்சென்று அவர்களை கைது செய்தனர். அப்போது போலீஸாருக்கும் மாணவர் அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் முதல்வர் போகும் சாலையான கிரீன்வேஸ் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாணவர் அமைப்பினர் தெரிவித்தனர்.