“பாஜக எம்.பி.க்கள் என்னைப் பார்த்தால் 2 அடி பின்னே செல்கிறார்கள்” – ராகுல் காந்தி

நான் கட்டிப்பிடித்துவிடுவேன் என அஞ்சி பாஜக எம்.பி.க்கள் என்னைக் கண்டால் 2 அடி பின்னால் செல்கிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

மூத்த பத்திரிகையாளர் கரண் தாபர் எழுதிய “டெவில்ஸ் அட்வகேட்: தி அன்டோல்ட் ஸ்டோரி” என்ற நூல் வெளியிட்டு விழா டெல்லியில் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் தலைவர்கள் திக்விஜய் சிங், கரண் சிங், அகமது படேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:

அரசியல்ரீதியாக என்னுடைய போராட்டம் அனைத்தும் வெறுப்புணர்வு இல்லாமல், எதிர்க்கட்சியினரிடம் கூட அன்பை விதைக்கும் விதமாகவே இருக்கும். நான் ஒரு பாஜக எம்.பி.யை கட்டிப்படிக்கவும் செய்வேன், அதேசமயம், பிரச்சினைகளுக்காகப் போராடவும் செய்வேன். ஆனால், பாஜகவினரிடம் இதேப்போன்று உறுதியாக எதிர்பார்க்க முடியாது. என்னுடைய போராட்டத்தில் வெறுப்பு இருக்காது.

கடந்த வாரம் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது நாடாளுமன்றத்தில் நான் பேசியபோது, பிரதமர் மோடியைக் கட்டித்தழுவி எனது அன்பைத் தெரிவித்தேன். அந்தச் சம்பவத்துக்கு பின், பாஜகவினர் என்னைக் கண்டால் ஓடுகிறார்கள்.

நம்முடைய மதம் நமக்குச் சொல்லிக்கொடுத்தது என்னவென்றால், யாரையும், வெறுப்புணர்ச்சியால், கட்டிப்போடவோ, அடைத்து வைத்திருக்கவோ முடியாது. அதைத்தான் நான் பின்பற்றுகிறேன்.

இந்தியா என்பது பலவண்ணங்கள் கொண்டது. ஆனால், இன்று வெறுப்பு, கோபம், ஏமாற்றம் ஆகிய வண்ணத்தால் காட்டப்படுகிறது. தேசத்தில் அனைத்து அரசியல்வாதிகளும், நான் உள்பட அரசியல் ரீதியாகப் பிளவுபட்டு இருக்கிறோம். அப்படித்தான் நம்மை இந்த உலகம் பார்க்கிறது. இதை நீங்கள் ஏற்கிறீர்களா அல்லது உலகம் இந்தக் கோணத்தில் நம்மைப் பார்க்கவில்லையா.

நம்முடைய அரசியலின் வடிவம் இதுதான். இது ஒருவகையான மோதல்போக்கு, வெற்றி பெறுபவர் அனைத்தையும் எடுத்துச் செல்வார். ஆனால், இதில் நான் உள்ளார்ந்து எப்படி வடிவமைக்கப்பட்டு இருக்கிறேன், எத்தனைபேர், உள்ளார்ந்து வடிவமைக்கப்பட்டு இருக்கிறீர்கள். நான் கூறும் அடிப்படை விஷயத்தை இங்கு அவையில் அமர்ந்திருக்கும் அத்வானி ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன்.

நான் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வியட்நாம் சென்றிருந்தேன். அப்போது அமெரிக்காவுடன் வியட்நாம் நடத்திய போரின் பாதிப்புகளைப் பார்த்தேன். அப்போது, மெக்காங் ஆற்றில் ஒரு படகு ஓட்டுபவருடன் சவாரி சென்றேன். அவர் உடலில் ஏராளமான காயங்கள் இருந்தன. எப்படி காயங்கள் ஏற்பட்டது என்று அவரிடம் நான் கேட்டேன். அதற்கு அவர் அமெரிக்காவுடனான போரில் என்னைக் கொல்லவந்தபோது ஏற்பட்ட காயம் என்றார். ஆனால், அமெரிக்கர்களை அவர் வெறுக்கவில்லை.

நாம் நமக்கு எதிராக இருப்பவர்களை வெறுப்பு இல்லாமல் எதிர்க்க வேண்டும். இதுதான் தனி ஒருவருக்கும் சிறந்த விஷயமாக இருக்கும். நான் அத்வானியின் கருத்தில் இருந்து முரண்படுகிறேன். நாட்டைப் பற்றி அவருக்கும் எனக்கும், வெவ்வேறு எண்ணம் இருக்கிறது. . நான் ஒவ்வொரு இஞ்ச்சுக்கும் என்னால் போராட முடியும், நான் அவரை கட்டித்தழுவமும் முடியும், போராடவும் முடியும்.

இதைத்தான் நான் மோடியிடம் செய்தேன். நாடாளுமன்றத்தில் நான் பிரதமர் மோடியை கட்டித்தழுவியதைப் பார்த்து, என்னைக் கடந்து செல்லும் பாஜக எம்.பி.க்கள் நான் கட்டிப்படித்துவிடுவேன் எனக் கருதி 2 அடி பின்வாங்கிச் செல்கிறார்கள்.

நான் நரேந்திர மோடியுடன் போரிடுவேன், பாஜகவினருடன் சண்டையிடுவேன். காங்கிரஸ் கட்சி பாஜவுடன் போராடும், சண்டையிடும். ஆனால், நாங்கள் பாஜகவை வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இதை அனைத்தையும் அவர்களிடம் எதிர்பார்க்க முடியுமா என எனக்குத் தெரியாது.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

கரண் தாப்பர் பேசுகையில், “ குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, அவரிடம் ஒரு நேர்காணலுக்கு ஏற்பாடு செய்திருந்தேன். அவரிடம் 3 நிமிடங்கள்தான் பேசியிருப்பேன். திடீரென்று நேர்காணலை நிறுத்திவிட்டுப் புறப்பட்டுவிட்டார். அதன்பின், இப்போதுவரை எந்த நேர்காணலிலும் அவர் பங்கேற்கவில்லை” எனத் தெரிவித்தார்.