புங்குடுதீவு மாணவி கொலை: ஒருதலைக் காதலே காரணம்; ஐவர் வன்புணர்வு செய்தனர்

புங்குடுதீவு மாணவியின் கொலையானது ஒருதலைக் காதல் காரணமாக இடம்பெற்றது எனவும் அம்மாணவியை ஐந்து பேர் இணைந்தே கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளர் என்றும் அதற்கு, சுவிஸ் குமார் என்பவர் திட்டம்தீட்டிக் கொடுத்தார் எனவும் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பொலிஸார், நீதிமன்றத்தில் தெரிவித்தனர். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏம்.எம்.எம்.றியால் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சான்றுப்பொருட்களின் பகுப்பாய்வு அறிக்கைகள் மற்றும் விசாரணை அறிக்கைகள் என்பன நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், கொழும்பு குற்றப்புலனாய்வு பொலிஸார், தாங்கள் இதுவரையில் மேற்கொண்ட விசாரணையின் அறிக்கையை மாத்திரமே மன்றில் இன்று சமர்ப்பித்தனர். கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்கள கூட்டுக்கொலைப் பிரிவு பொறுப்பதிகாரி நிசாந்த சில்வா, விசாரணை அறிக்கையை மன்றில் சமர்ப்பித்தார்.

அந்த அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

‘மேற்படி மாணவியின் கொலையுடன் தொடர்புடைய 6ஆவது சந்தேகநபரான சிவநேசன் துசாந்த் என்பவர், மேற்படி மாணவியை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளதுடன் அது தொடர்பில் அந்த மாணவியிடமும் தெரிவித்துள்ளார். அதற்கு அம்மாணவி மறுப்பு தெரிவித்ததை அடுத்து, இவரும் 5ஆவது சந்தேகநபரான தில்லைநாதன் சந்திரகாசனும் இணைந்து மாணவியைக் கடத்துவதற்கு திட்டம் தீட்டியுள்ளனர்.

இதற்காக, 2ஆவது மற்றும் 3ஆவது சந்தேகநபர்களின் உதவி நாடப்பட்டுள்ளது. இந்த 2ஆவது மற்றும் 3ஆவது சந்தேகநபர்கள் இருவருக்கு எதிராகவே, பிரிதொரு வழக்கொன்றின் போது, மேற்படி மாணவியின் தாயார் சாட்சியளித்திருந்தார். இந்நிலையில், மாணவியைக் கடத்தி வன்புணர்வுக்கு உட்படுத்துவது தொடர்பான திட்டத்தை சுவிஸ்குமார் என்ற 9ஆவது சந்தேகநபரே வகுத்துக் கொடுத்துள்ளார். மாணவியைக் கடத்துவதற்குத் தேவையான தகவல்களை, நேற்று வியாழக்கிழமை (03) கைது செய்யப்பட்ட 11ஆவது சந்தேகநபரே வழங்கியுள்ளார்.

அத்துடன், 11ஆவது சந்தேகநபர், 2015ஆம் மே மாதம் 10ஆம் திகதியன்று, யாழ்ப்பாணத்திலிருந்து 4 கஞ்சா பைக்கற்றுக்களுடன் ஊர்காவற்றுறைக்குச் சென்றுள்ளார். அன்று இரவு தொடக்கம் கொலை நடைபெறுவதற்கு முதல்நாள் இரவு வரையில் மது அருந்தி, உல்லாசமாக இருந்துள்ளனர். மேலும், பீடிக்குள் கஞ்சாவை வைத்தும் நுகர்ந்துள்ளனர்.

2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதியன்று, குறித்த மாணவி பாடசாலை செல்லும் போது, 2ஆவது மற்றும் 3ஆவது சந்தேகநபர்கள் இருவருமே மாணவியைக் கடத்தியுள்ளனர். தொடர்ந்து, 5ஆவது மற்றும் 6ஆவது சந்தேகநபர்கள், மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர். தொடர்ந்து, மாணவியை கடத்திய இருவரும் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இதில் மேலும், ஒருவராக 5ஆவது நபர் மீண்டும் வன்புணர்வு செய்துள்ளார். அது யார் என்பது டி.என்.ஏ பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தெரியவரும்.

வன்புணர்வின் பின்னர் மாணவியை கொலை செய்து, அதனை கொடூரமான கொலையாக மாற்றி கடற்படையினர் செய்ததாக திசை திருப்புவதற்கு முயற்சித்துள்ளனர். அதற்காக மாணவியின் கைகள், கால்களை மரத்தில் இழுத்துக் கட்டியுள்ளனர்.

இந்தக் கொலை தொடர்பில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள மிகுதிச் சந்தேகநபர்களில், 10ஆவது சந்தேகநபர் தவிர்ந்த ஏனையோர், சம்பவம் நடைபெற்ற தினம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சென்று கொலைக்கான தடயங்களை அழித்து, கொலையை மறைக்க முயன்றுள்ளனர். 10ஆவது சந்தேகநபர் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 12ஆவது சந்தேகநபர் விரைவில் கைது செய்யப்படுவார்.

இந்தக் கொலை தொடர்பில் புங்குடுதீவில் உள்ள சிலருக்கு தகவல் தெரியும். அவர்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை 0773291500, 0778503002 ஆகிய அலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி, தகவல் தெரிவிக்க முடியும்’ என பொறுப்பதிகாரி நிசாந்த சில்வா கூறினார்.

குற்றவாளிகள் என சந்தேககிக்கப்படுபவர்கள் தவிர ஏனைய சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்குமாறு, சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் ஆஜராகிய தென்னிலங்கை சட்டத்தரணி கோரினார். இதற்கு, மாணவி சார்பாக மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி க.சுகாஸ், எதிர்ப்பு தெரிவித்தார். ‘பகுப்பாய்வு அறிக்கைகள் இன்னமும் நீதிமன்றத்துக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில், சந்தேகநபர்கள் எவரையும் பிணையில் விடுவிக்கக்கூடாது’ என்றார்.

‘இந்த கொலைச் சம்பவம் சகித்துக்கொள்ள முடியாத, துன்பகரமான செயல். கடவுளின் கிருபையால் நீதி கிடைக்கும். அதுவரையில் பொறுமையாக இருங்கள்’ என நீதிவான் றியால் கூறினார். சந்தேகநபர் ஒருவர், நீதிவானிடம் கருத்து தெரிவிக்க முற்பட்ட போதும், நீதவான் அதற்கு மறுப்புத் தெரிவித்து சட்டத்தரணியூடாக கருத்துக்களை தெரிவிக்குமாறு கூறினார். இந்த வழக்கை, எதிர்வரும் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்க, நீதவான் உத்தரவிட்டார்.