புதிய அரசியலமைப்புக்கு ஆலோசனை வழங்க விசேட குழு நியமனம் – வடமாகாண சபை

இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் இனப்பிரச்சினைக்கு தீர்வுத் திட்டத்துக்கு மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்கான வடமாகாண சபை உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற போது, அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவசர பிரேரணையாக இந்த விடயத்தை சபைக்கு கொண்டு வந்தார்.

இதுவரை காலமும் இயற்றப்பட்ட அரசியல் யாப்புக்கள் தமிழ் மக்களின் இணக்கப்பாட்டுடன் மேற்கொள்ளப்படவில்லை என்பதாலும், அரசியல் யாப்பு மாற்றம் அல்லது உருவாக்கத்தில் தமிழ் மக்களின் பங்களிப்பு, அவர்களின் உரிமைகளை அரசியல் யாப்பு மூலம் நிலைநிறுத்துவதை உறுதி செய்வது அவசிமென்பதாலும், தமிழ் தேசிய இனத்தின் சுயாட்சிக் கோரிக்கை தொடர்பில் அனுபவங்களை கொண்ட மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் 19 பேர் கொண்ட குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய இனத்தின் சார்பில் முன்வைக்க வேண்டிய முன்மொழிவுகளை வரைந்து இந்த குழு, வடமாகாண சபையில் சமர்ப்பித்து, அந்த முன்மொழிவுகள் மத்திய அரசுக்கு ஆலோசனையாக வழங்கப்படும்.

இந்த குழுவின் இணைத்தலைவராக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் உள்ளார்.

மேலும் அமைச்சர்களான த.குருகுலராஜா, பா.டெனீஸ்வரன், ப.சத்தியலிங்கம், பொ.ஐங்கரநேசன், உறுப்பினர்களான கே.சயந்தன், அ.ரூ.பிறிமூஸ் சிராய்வா, ம.அன்ரனி ஜெகநாதன், ஜி.ரி.லிங்கநாதன், எம்.கே.சிவாஜிலிங்கம், ப.அரியரத்தினம், எம்.தியாகராசா, ஆ.பரஞ்சோதி, ஆயுப் அஸ்மின், வை.தவநாதன், அனந்தி சசிதரன். இ.ஆனோல்ட், க.சர்வேஸ்வரன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.