புது அரசியலமைப்பு; நாடு முழுதும் மக்கள் கருத்து

பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய அரசியலமைப்புத் தொடர்பில் நாடு முழுவதிலும் உள்ள மக்களின் கருத்துக்களை அறியும் பணி நாளை மறுதினம் (13)ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அரசியலமைப்புத் தொடர்பான கருத்துக்களை அறியும் நோக்கில் சட்டத்தரணி லால் விஜயநாயக்க தலைமையிலான குழுவொன்றை பிரதமர் நியமித்திருந்தார். இந்தக் குழுவினர் இன்று (11)கொழும்பில் கூடி ஆராயவுள்ளனர்.

நாளை மறுதினம் நாடு முழுவதும் சென்று அரசியலமைப்புத் தொடர்பாக மக்களின் கருத்துக்களை அறிந்துகொள்ள இக்குழுவினர் தீர்மானித்துள்ளனர். இவர்களின் முதலாவது அமர்வு நாளைமறுதினம் புதன்கிழமை கொழும்பில் நடைபெறவிருப்பதுடன், அதனை தொடர்ந்து ஏனைய மாவட்டங்களுக்குச் சென்று மக்களின் கருத்துக்களை அவர்கள் அறிந்துகொள்ளவுள்ளனர். இவர்கள் நாடு முழுவதிலும் மக்கள் கருத்துக்களை அறிந்து எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி க்கு முன்னர் தமது அறிக்கையை பிரதமருக்கு சமர்ப்பிக்கவிருப்பதாகத் தெரியவருகிறது.

அதேநேரம், பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை கடந்த சனிக்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டபோதும் அது தொடர்பான முழுநாள் விவாதம் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. குறித்த பிரேரணையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் பல வலியுறுத்தியதால் சனிக்கிழமை நடைபெறவிருந்த விவாதம் செவ்வாய்க்கிழமைக்குப் பிற்போடப்பட்டது.

பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் நடவடிக்கைக்கு சகல கட்சிகளின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் கருதுவதால், அப்பிரேரணையில் மேற்கொள்ளவேண்டிய திருத்தங்கள் தொடர்பில் பல தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.