புலிகளுக்கு எதிரான 5 வழக்குகளுக்கு ஏப்ரலுக்கு முன்னர் தீர்ப்பு

பயங்கரவாதச் செயற்பாடுகள் தொடர்பில், அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் ஐந்து வழக்குகளின் தீர்ப்புகளையும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முடிவதற்குள் வழங்க அந்த நீதிமன்றத்தின் நீதிபதி கேமா சுவர்ணாதிபதி தீர்மானித்துள்ளார்.

கீழ்கண்ட வழக்குகளுக்கான தீர்ப்புகளே, ஏப்ரல் மாதம் முடிவதற்குள் வழங்கப்படவுள்ளது.

1.அநுராதபுரம் விமான நிலையத்தின் மீது, வான் வழியாகவும் தரைவழியாகவும் தாக்குதல்களை மேற்கொண்டு, 16 விமானங்களை நாசப்படுத்தி, 400 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்ததுடன், பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்த 14 பேரைக் கொன்றொழித்த வழக்கு.

2.பலாலி விமான நிலையத்திலிருந்து இரத்மலானை விமானம் நிலையத்தை நோக்கிப் பயணித்த அன்டெனோவ் 32 விமானத்தை, வில்பத்து தேசிய சரணாலயத்தில் இருந்து ஏவுகணைகள் ஊடாக தாக்கியழித்து, பாதுகாப்புத் தரைப்பைச் சேர்ந்த 37 உறுப்பினர்களை பலியெடுத்த வழக்கு.

3. ஸ்ரீ லங்கா கஜபா படையணியின் நிர்வாகியான கேர்ணல் ஜயந்த சுரவீர உள்ளிட்ட எண்மரை, வில்பத்து தேசிய சரணாலயத்தில் வைத்து சுட்டுக்கொன்ற வழக்கு.

4. மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 29 பேரை, அநுராதபுரத்தில் வைத்து, தற்கொலைத் தாக்குதல் மேற்கொண்டு பலியெடுத்த வழக்கு.

5. கெப்பத்திகொல்லேவ யக்காவெவ பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றின்
மீது கிளைமோர் தாக்குதலை மேற்கொண்டு பொதுமக்கள் 68 பேரை கொன்றொழித்தமை மற்றும் பொதுமக்கள் 60 பேருக்கு கடும் காயங்களை ஏற்படுத்தியமை ஆகிய வழக்குகளுக்கே தீர்ப்பளிக்கப்படவுள்ளன.