பொலிஸார் வசமுள்ள காணிகள் ‘வருட இறுதிக்குள் விடுவிக்கப்படும்’

“மட்டக்களப்பு மாவட்டத்தில், பொலிஸாரால் பயன்படுத்தப்பட்டு வரும், வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி, கொக்கட்டிச்சோலை மற்றும் மயிலம்பாவெளி ஆகிய இடங்களிலுள்ள பொதுமக்களின் காணிகளை, இவ்வருட இறுதிக்குள் விடுவித்துக் கொடுக்கமுடியும்” என்று, மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் யாகொட ஆராய்ச்சி தெரிவித்தார்.

மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம், பிரதியமைச்சர் எம்.எஸ்.எம்.அமீரலி, நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் ஆகியோரின் இணைத் தலைமையில், மாவட்ட செயலகத்தில் நேற்று (27) இடம்பெற்றது. அதன் போதே பிரதிப் பொலிஸ்மா அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொது மக்களின் காணிகளைப் பொலிஸார் பயன்படுத்துகின்றமை தொடர்பில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்
ஆர். துரைரெட்ணம் கேள்வி எழுப்பினார்.

“ஒரு மாதம் இரண்டு மாதம் என்று, பொலிஸார் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இதைத் தொடர்ந்து கொண்டு போக முடியாது. உறுதியான முடிவினைச் சொல்ல வேண்டும். மண்டூர் பாலமுனைப் பிரதேச மக்களின் மீள்குடியேற்ற வீடுகளை அமைப்பதற்கு வெல்லாவெளிப் பொலிஸார் வெளியேறாமல் இருப்பது பிரச்சினையாக இருக்கிறது” என அவர் கூறினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பொலிஸ்மா அதிபர், “வெல்லாவெளி பொலிஸ் நிலையத்துக்குரிய கட்டட நிர்மாண வேலைகள் 90 சதவீதம் நிறைவு பெற்று விட்டன. இன்னும் இரண்டொரு வார வேலைகள் உள்ளன. வருகின்ற சித்திரைப் புதுவருடத்துக்கு முன்னர் அப்பிரதேசத்தினை மக்களுக்கு வழங்க முடியும். அதே நேரம், களுவாஞ்சிக்குடி, மயிலம்பாவெளி பிரதேசங்கள் இவ்வருட இறுதிக்குள் விடுவிக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.