மகனுக்காக கறுப்பு அங்கி அணிந்தார் மஹிந்த

கால்டன் ஸ்போட்ஸ் நெட்வேர்க் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதிமோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனான யோஷித, புதன்கிழமை ஆஜராகியிருந்தார். தேசிய ஆடையை அணிந்திருந்த அவர், அவ்வாடைக்கு மேலாக, சட்டதரணிகள் அணியும் கறுப்பு நிறத்திலான அங்கியையும் அணிந்திருந்தார். சட்டத்தரணியான மஹிந்த ராஜபக்ஷ, சட்டத்தரணிகள் அணியும் மேலங்கியை பல வருடங்களுக்குப் பின்னர், நேற்றே அணிந்திருந்தார்.

இதேவேளை, பணச்சலவைசட சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளார் என விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரும் கடற்படை வீரருமான லெப்டிணன் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்குமான பிணைத் திருத்த விண்ணப்பத்துக்கு ஆட்சேபங்களைத் தெரிவிப்பதற்கு, திகதி குறிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு, நேற்று புதன்கிழமை பரிசீலிக்கப்பட்டபோதே, அதற்கான ஆட்சேபங்களை, எதிர்வரும் 29ஆம் திகதியன்று தெரிவிக்கலாம் என்று அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஜே.ஏ.ஏ.ஆர்.ஹெய்யந்துடுவ, இவ்வழக்கின் பிரதிவாதிகளான சட்டமா அதிபர் மற்றும் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆகியோரும் அன்றைய தினம், மன்றில் ஆஜராக வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரும் கடற்படை வீரருமான லெப்டினன் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்குமான பிணையை நிராகரித்து கடுவலை நீதவான் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, கொழும்பு உயர்நீதிமன்றத்தில் கடந்த 15ஆம் திகதியன்று பிணைத் திருத்த விண்ணப்பம் செய்யப்பட்டது.

நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர், மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிட்டே, இந்தப் பிணைத் திருத்த விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிமன்றம் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போது, அங்கு ஆஜராகியிருந்த சந்தேகநபர்கள் சார்பான சட்டத்தரணிகள், தங்களது கட்சிக்காரர்களுக்கு எதிராக கடந்த ஜனவரி 30ஆம் திகதி, கடுவெல நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு, சட்டவிரோதமானது என்றனர். அத்துடன், இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டபோது, நீதிமன்றச் சுருக்கெழுத்தாளர், மன்றுக்கு வருகை தந்திருக்கவில்லை என்றும் சட்டத்தரணிகள் எடுத்துரைத்ததுடன் வழக்குத் தொடர்பான ஆரம்ப ஆவணங்களை, கடுவெல நீதவான் நீதிமன்றலிருந்து வரவழைத்துக்கொள்ளுமாறும் கோரினர்.

அவர்களுடைய வாதங்களை கருத்திற்கொண்ட நீதிபதி, ஜனவரி 29 மற்றும் பெப்ரவரி 1ஆம் திகதிகளுக்கிடைப்பட்ட காலத்தில், கடுவெல நீதவான் நீதிமன்ற பதிவு அறிக்கைகளை பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டார். அத்துடன், இந்த வழக்குத் தொடர்பில், கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் உள்ள அறிக்கைகளையும் வருவிக்குமாறு நீதிபதி கட்டளையிட்டார்.

சி.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் அபிவிருத்திப் பணிகளுக்காக அரச சொத்துக்களைப் பயன்படுத்தியமை மற்றும் காரணம் காட்ட முடியாத நிதிப் பிரயோகங்கள் உள்ளிட்ட ஆறு பிரதான காரணங்களை முன்னிலைப்படுத்தி யோஷித
ராஜபக்ஷ உள்ளிட்ட அறுவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவர்கள் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.