முன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான பாரிய வேலை திட்டம் யாழை மையப்படுத்தி விரைவில் ஆரம்பம்

இலங்கை மக்கள் நலன்புரி ஸ்தாபனத்தின் தலைவி வதனி அம்மையார் உறுதி

தமிழீழ விடுதலை புலிகள் இயக்க முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம், பொருளாதாரம், வாழ்க்கை தரம், சுய தொழில் வாய்ப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துகின்ற பாரிய வேலை திட்டம் ஒன்றை யாழ்ப்பாண மாவட்டத்தை மையமாக கொண்டு விரைவில் ஆரம்பிக்க உள்ளார் என்று இலங்கை மக்கள் நலன்புரி ஸ்தாபனத்தின் தலைவி வதனி மோகனசங்கர் அம்மையார் தெரிவித்தார்.

வெளிநாட்டில் ஓமானையும், உள்நாட்டில் மாத்தளையையும் பிரதான தளங்களாக கொண்டு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற கோடீஸ்வர தொழிலதிபர் மோகனசங்கரின் பாரியாரான இவர் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர்.

கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக நாடளாவிய ரீதியில் மனித நேய செயல் திட்டங்கள் பலவற்றையும் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் பட்டு மேற்கொண்டு வருகின்ற இவரால் யாழ்ப்பாண மாவட்டத்திலும் கடந்த காலங்களில் பல பல வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இவரின் திருமண வாழ்க்கையின் 24 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி வறிய, போரால் பாதிக்கப்பட்ட, பெண் தலைமைத்துவ குடும்பங்களை சேர்ந்த 15 பயனாளிகளுக்கு சுய தொழில் மேம்பாட்டுக்காக கடந்த புதன்கிழமை தையல் இயந்திரங்களை வழங்கி வைத்தார். பயனாளிகளில் கணிசமான தொகையினர் முன்னாள் போராளிகள் ஆவர்.

இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி மூலமாக பயனாளிகளின் தெரிவு மேற்கொள்ளப்பட்டு இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தில் இடம்பெற்ற சம்பிரதாயபூர்வ வைபவத்தில் வைத்து இவை கையளிக்கப்பட்டன. இவ்வைபவத்தில் இவரின் கணவர் தொழிலதிபர் மோகனசங்கர், யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அடங்கலான இராணுவ உயரதிகாரிகள், சிங்கள திரையுலகின் மூத்த நடிகை சுனிதா வீரசிங்க, அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்க பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விழாவை தொடர்ந்து அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்க பிரதிநிதிகள் மத்தியில் உரையாடியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-

எனது கணவன் மோகனசங்கர் ஒரு கோடீஸ்வர வர்த்தகர் ஆவார். அவருடைய வருமானத்தில் ஒரு கணிசமான தொகையை எனது மனித நேய பணிகளுக்காக தந்து உதவுகின்றார். எனது வேலை திட்டங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க அவர் தருகின்ற பணத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றன.

நான் எனது சிறிய பிராயத்தில் வறுமையின் கொடூரத்தை அனுபவித்து இருக்கின்றேன். இப்போது செல்வ செழிப்போடு வாழ்கின்ற நிலையில் கணவரின் பூரண ஒத்துழைப்புடன் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் கஷ்டப்படுகின்ற அனைத்து தரப்பினர்களுக்கும் மனித நேய செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றேன்.

எனது பூர்வீக மண்ணான யாழ்ப்பாணத்துக்கும் பல சேவைகளை செய்ய முடிந்திருப்பது பெருமகிழ்ச்சியையும், மன நிறைவையும் தருகின்றது. யாழ். போதனா வைத்தியசாலையில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த 74 பிள்ளைகளுக்குமான மருந்து பொருட்கள் முழுவதையும் மாதாந்தம் அனுப்பி வந்திருக்கின்றேன். எனது முழுமையான நிதி பங்களிப்பில் 07 பிள்ளைகள் யாழ். பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி படித்து பட்டம் பெற்று உள்ளனர். புங்குடுதீவை சேர்ந்த 15 பிள்ளைகளுக்கும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த 10 பிள்ளைகளுக்கும் கற்றல் உபகரணங்களை கடந்த வருட இறுதியில் வழங்கினேன். புங்குடுதீவு மகா வித்தியாலயத்துக்கு மைதானம் ஒன்றை அமைத்து கொடுக்கின்ற பணியில் ஈடுபட்டு உள்ளதுடன் இப்பாடசாலை மாணவர்களின் உதைபந்தாட்ட விளையாட்டு திறனை மேம்படுத்துகின்ற வகையில் இவர்களுக்கு விளையாட்டு சப்பாத்துக்களை வழங்கி உள்ளேன்.

நகுலேஸ்வர கோயில் குருக்கள் ஐயாவுக்கு ஒழுங்கான வீடு கிடையாது என்பதை அறிந்து அவருக்கு ஒரு வீடு ஒன்றை கட்டி கொடுக்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளேன். மேலும் இப்பிரதேசத்தில் 05 நவீன வீடுகளை அமைத்து வறியவர்களுக்கு வழங்க உள்ளேன். எனது இவ்வாறான மனித நேய செயற்பாடுகளுக்கு முத்தாப்பு வைத்தது போல எமது 24 ஆவது வருட திருமண நிறைவை ஒட்டி வறிய, போரால் பாதிக்கப்பட்ட, பெண் தலைமைத்துவ குடும்பங்களின் சுய தொழில் மேம்பாட்டுக்காக தையல் இயந்திரங்களை வழங்கி வைக்க முடிந்துள்ளது. எமது திருமண நிறைவு கொண்டாட்டத்தை சமுதாயத்துக்கு பயன் உள்ள வகையில் கொண்டாடி உள்ளோம்.

யாழ்ப்பாணம் பொன் விளையும் பூமி ஆகும். ஒரு காலத்தில் யாழ்ப்பாணம் என்றால் எங்கு சென்றாலும் ஒரு மதிப்பும், மரியாதையும் நிலவியது. ஆனால் கடந்த 30 வருட யுத்தத்தாலும், அந்த யுத்தம் கொடுத்த எச்சத்தாலும் யாழ்ப்பாணம் பாரிய பின்னடைவுகளை அடைய நேர்ந்து உள்ளது. யாழ்ப்பாணத்தின் இன்றைய இளைய சமுதாயம் கல்வியில் மாத்திரம் அன்றி, ஒழுக்கத்திலும் கெட்டு போய் உள்ளது என்பது மிக கவலைக்கு உரிய விடயம் ஆகும். மீண்டும் யாழ்ப்பாண மண் பழைய நிலைமைக்கு உயர்ந்து அனைத்து விடயங்களிலும் முன்னிலை வகிக்க வேண்டும் என்பது எனது பேரவா ஆகும். ஆனால் புலம்பெயர் தேசங்களில் வாழ்கின்ற தமிழ் சமூகம் எமது உறவுகளின் வாழ்வாதார எழுச்சி, பொருளாதார வளர்ச்சி, அபிவிருத்தி போன்றவற்றுக்கான மனித நேய உதவிகளை செய்து கொடுப்பதில் மெத்தன போக்கையே கைக்கொண்டு வருகின்றது. புலம்பெயர் தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்கள் அவர்களுடைய மாதாந்த வருமானத்தில் ஒரு சதவீதத்தை இங்கு உள்ள எமது உறவுகளுக்காக பயன்படுத்தினாலே யாழ்ப்பாண மண்ணை ஒரு குட்டி சிங்கப்பூராக மாற்ற முடியும் என்பது திண்ணம்.

முன்னாள் போராளிகளின் வாழ்க்கை சொல்லொணா துயரங்களை கொண்டதாக உள்ளது. இவர்களுக்குகூட எமது புலம்பெயர் தமிழ் சமூகம் உதவிகளை செய்வதில் அசமந்த போக்கையே கைக்கொள்கின்றது. இருப்பினும் நான் முன்னாள் போராளிகளின் குறைகளை செவிமடுத்து அவற்றை நிறைவு செய்து கொடுக்கின்ற பாரிய வேலை திட்டம் ஒன்றை யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி வெகுவிரைவில் ஆரம்பிக்க உள்ளேன். இதன் மூலமாக முன்னாள் போராளிகளின் வாழ்க்கை பிரச்சினைக்கு உரிய தீர்வுகளை பெற்று கொடுக்க முடியும் என்பதோடு அவர்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம், வாழ்க்கை தரம், தொழில் துறை ஆகியவற்றை மேம்படுத்த முடியும் என்றும் நம்புகின்றேன்.

இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி உண்மையிலேயே யாழ்ப்பாண மக்களுக்கு கிடைக்க பெற்று உள்ள ஒரு பொக்கிசம் ஆவார். யாழ்ப்பாண மண்ணையும், மக்களையும் வாழ வைக்க வேண்டும் என்பதற்காக அர்ப்பணிப்பு, பற்றுறுதி, இதய சுத்தி ஆகியவற்றுடன் செயற்பட்டு வருகின்றார். இவர் மூலமாக நான் எமது மக்களுக்கு வழங்கிய சேவைகள் அனைத்தும் அப்பழுக்கற்ற முறையில் நூற்றுக்கு நூறு சதவீதம் எமது மக்களை சென்றடைந்து உள்ளன. இதற்காக இவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். மேலும் உண்மையிலேயே கஷ்டப்படுபவர்கள் யாராக இருப்பினும் அவர்களுக்கு உதவி செய்ய எப்போதும் நான் தயாராகவே உள்ளேன்.