மு. கா. தேசியப் பட்டியல் விவகாரம்: அரசியலில் இருந்து விலக ஹசன் அலி உத்தேசம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், இக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி ஆகியோருக்கு இடையில் வலுவான பனிப் போர் இடம்பெற்று வருகின்றது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முந்திய சில மாதங்களுக்கு முன்னர் இப்பனிப் போர் ஆரம்பம் ஆகி உள்ளது. உண்மையில் இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸவை ஆதரிக்க வேண்டும் என்கிற உறுதியான நிலைப்பாட்டில் தலைவர் ரவூப் ஹக்கீம் காணப்பட்டார், இதற்கு சுய நல காரணங்கள் இருந்து இருக்க வேண்டும்.

ஆனால் இத்தேர்தலில் எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவையே ஆதரிக்க வேண்டும் என்பதில் செயலாளர் நாயகம் ஹசன் அலி பற்றுறுதியாக காணப்பட்டார். முஸ்லிம் இன விரோத போக்கு மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் தலை விரித்து ஆடுகின்றது, எனவே இதை தொடர அனுமதிக்க முடியாது என்கிற அடிப்படையிலேயே இவரின் வலியுறுத்தல் அமைந்தது.

கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் அடங்கலாக கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் மஹிந்த ராஜபக்ஸவை ஆதரிக்க கூடாது என்கிற நிலைப்பாட்டுடனேயே ஒத்து நின்றனர்.

இந்நிலையில் தனிமரமாக கைவிடப்படலாம் என்கிற அச்சம் தலைவரை தொற்றிக் கொண்டது. தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்று முடிந்த நிலையில்தான் தலைவர் கொழும்பில் ஊடக மாநாடு நடத்தி எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கின்ற கட்சித் தீர்மானத்தை அறிவித்தார். இத்தீர்மானத்தை அறிவித்தபோது தலைவரின் குரல் கரகரத்து தழதழத்து போனதை ஊடகவியலாளர்கள் அவதானித்தார்கள்.

தலைவர் ரவூப் ஹக்கீம் ஒரு விடயத்தில் பிடிவாதம் ஆனவர். மு. காவில் இவரை தவிர எவரும் அமைச்சரவை அமைச்சர்களாக இருக்கக் கூடாது. இதுவே இவருக்கும், பஷீர் சேகுதாவூத்துக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் உண்மையான காரணம். ஒரு உறைக்குள் இரண்டு கத்தி இருக்கக் கூடாது என்று தலைவர் அப்போது சத்தம் போட்டு இருக்கின்றார்.

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஹசன் அலிக்கு 100 நாள் வேலைத் திட்ட அரசாங்கத்தில் பிரதி அமைச்சர் பதவிதான் கிடைக்கும் என்று தலைவர் நினைத்து இருந்தார். ஆனால் ஹசன் அலிக்கு இராஜாங்க அமைச்சர் பதவி கிடைத்தது. இது ரவூப் ஹக்கீமுக்கு அதிர்ச்சி கொடுத்தது. சுகாதார இராஜாங்க அமைச்சை முன்னோக்கி நடத்திச் செல்கின்ற விடயத்தில் ஆவது ஆலோசனை, வழிகாட்டல் ஆகியவற்றை தலைவரிடம் ஹசன் அலி பெறுவார் என்று ஹக்கீம் எதிர்பார்த்தார். ஆயினும் அதிருப்திஅடைந்தார்.

கடந்த பொதுத் தேர்தல் இடம்பெற்றபோது அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட ஹசன் அலி விருப்பம் தெரிவித்தார். ஆனால் இவரை நிச்சயம் தேசியப் பட்டியல் எம். பி ஆக்குவார் என்று தலைவர் வாக்குறுதி கொடுத்தார்.

மு. காவின் முதனிலை தேசியப் பட்டியல் வேட்பாளராக ஹசன் அலியின் பெயர் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பு மனுவில் தாக்கல் செய்யப்பட்டது. இதே போல முன்னிலை தேசியப் பட்டியல் வேட்பாளராக நிசாம் காரியப்பரின் பெயர் தாக்கல் செய்யப்பட்டது. டம்மிகளாக சிலரின் பெயர்கள் இடம்பெற்றன.

ஆனால் தேர்தல் முடிந்த பிற்பாடு தேசியப் பட்டியல் எம். பிகளாக சொந்த சகோதரனையும், குடும்ப நண்பரையும் பெயர் குறிப்பிட்டு நியமிக்க கோரி ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளருக்கு மு. கா தலைவர் அறிவுறுத்தல் வழங்கினார். இதில் ஏதோ தவறு இருக்கின்றது என்று நினைத்து ரவி கருணநாயக்க உட்பட ஐ. தே. க முக்கியஸ்தர்கள் பலரும் மீண்டும் தொடர்பு கொண்டு பெயர்களை உறுதிப்படுத்தினார்கள்.

நம்பிக்கை, விசுவாசம் ஆகிய காரணங்களின் அடிப்படையிலேயே சகோதரனுக்கும், குடும்ப நண்பருக்கும் தேசியப் பட்டியல் ஆசனத்தை கொடுத்து உள்ளார் என்று கட்சி முக்கியஸ்தர்கள் சிலருக்கு தலைவரே கூறி இருக்கின்றார். ஆயினும் தலைமைக்கு ஏற்பட்டு இருக்கக் கூடிய பாரிய அழுத்தம் காரணமாக இருவரும் எந்நேரமும் பதவியை இராஜினா செய்ய வேண்டியவர்கள் ஆக்கப்பட்டு உள்ளார்கள்.

செயலாளர் நாயகம் ஹசன் அலி பதவிக்கு பின்னால் திரிபவர் அல்லர். ஏனென்றால் இவரை வெளிநாட்டுக்கு தூதுவராக அனுப்ப அரச தரப்பு சமிக்ஞை காட்டியபோதிலும் நிராகரித்து விட்டார். இவரை பொறுத்தளவில் கௌரவம்தான் முக்கியம்.

தலைவர் வாக்குறுதி வழங்கியபடி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தந்தே ஆக வேண்டும், இல்லையேல் அரசியலில் இருந்து முழுமையாக ஒதுங்கி விடுவார் என்று நெருக்கமானவர்களுக்கு ஹசன் அலி கூறி உள்ளார்.

இதே நேரம் முஸ்லிம்களின் கரையோர மாவட்ட கோரிக்கை விடயத்தில் ரவூப் ஹக்கீம் அசட்டையாக உள்ளார் என்றும் குற்றம் சாட்டப்படுகின்றது.

ஹசன் அலி ஊடகங்களுக்கு வாய் திறக்கின்ற பட்சத்தில் தலைவர் ரவூப் ஹக்கீம் ஏராளம் பிரச்சினைகளை சந்திக்க நேரும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத மு. கா பிரமுகர் ஒருவர் எமக்கு தெரிவித்தார்.