மேதினத்தில் 12 கூட்டங்கள், 16 பேரணிகள்

தொழிலாளார் தினமான மே 1ஆம் திகதியன்று 12 பிரதான கூட்டங்கள் மற்றும் 16 பேரணிகளை நடத்துவதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நடவடிக்கைகளை எடுத்துள்ளன. கொழும்பு மற்றும் காலி ஆகிய பிரதான நகரங்களிலேயே பெரும் கூட்டங்களும் பேரணிகளும் நடத்தப்படவுள்ளன. அதற்கு அப்பால், பெருந்தோட்ட தொழிலாளர்கள் செறிந்து வாழ்கின்ற மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி நுவரெலியா, தலவாக்கலை உள்ளிட்ட நகரங்களில் கூட்டங்களும் பேரணிகளும் நடத்தப்படவுள்ளன.

சு.க.மேதினம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலி சமனல மைதானத்தில் நடைபெறும்.

பேரணி, காலி அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலிருந்தும் காலி வைத்தியசாலைக்கு அண்மையிலிருந்தும் ஆரம்பமாகும். இவ்விரண்டு ஊர்வலங்களும் சமனல மைதானத்தை இரண்டு வழிகளில் சென்றடையும்.

ஐ.தே.க மேதினம்

ஐக்கிய தேசிய கட்சியின் மே தினம், பொரளை கெம்பல் மைதானத்தில் இடம்பெறும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெறும்.

பேரணியானது மாளிகாவத்த பிரதீபா மாவததையிலிருந்து ஆரம்பிக்கவுள்ளது. இந்த மே தினத்துக்கு ஆதரவளிக்கும் ஜனநாயக் தேசிய மையத்தின் பேரணி, ஹைட்பார்க் மைதானத்தில் ஆரம்பித்து பிரதான பேரணியுடன் இணைந்துகொள்ளும்.

ஜே.வி.பியின் மேதினம்

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) மேதினக்கூட்டம் கொழும்பு பி.ஆர். சி மைதானத்தில் இடம்பெறும்.

பேரணியானது, தெஹிவளை எஸ்.டி.எஸ் ஜயசிங்க பாடசாலை முன்பாக ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பேரணியும், கூட்டமும் ஜே.வி.பி கட்சியின் தலைவரும் எம்.பியுமான அனுர குமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெறும்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கிருலப்பனை லலித் அத்துலத்முதலி விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும். பேரணியானது சாலிகா மைதானத்துக்கு அண்மையில் இருந்து ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கூட்டம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதிய சமசமாஜ கட்சி

புதிய சமசமாஜ கட்சியின் மேதினக்கூட்ட் கொழும்பு குணசிங்கபுரத்தில் இடம்பெறும். பேரணியானது சொன்டர்ஸ் பகுதியிலிருந்து ஆரம்பமாகும்.

ஐக்கிய சோலிச கட்சியின் மேதினம்

ஐக்கிய சோலிச கட்சியின் மேதினக்கூட்டம், கொழும்பு-14 பலாமரச்சந்தியில் இடம்பெறும். பேரணியானது ஒருகொடவத்தை அரச களஞ்சிய தொகுதியிலிருந்து ஆரம்பமாகும்.

கொழும்பு முத்தையா மைதானத்தில்

இலங்கை வர்த்தக தொழிற்நுட்ப மற்றும் பொது தொழிலாளர் சங்கம், சுதந்திர வர்த்தக வலய சங்கம், பொது சேவையாளர் சங்கம், இலங்கை வங்கிச் சங்கம், இணைந்து கொழும்பு- முத்தையா மைதானத்தில் மேதினக்கூட்டத்தை நடத்தவிருக்கின்றன.

பேரணிகள் கொள்ளுப்பிட்டி மற்றும் இலங்கை வங்கியின் தலைமையகத்துக்கு அண்மையில் இருந்து ஆரம்பமாகும்.

ஜனநாயகக் கட்சி

ஜனநாயகக் கட்சியின் மேதினக்கூட்டம் பத்தரமுல்லை புத்ததாஸ மைதானத்தில் நடைபெறும், எச்எஸ்பிசி வங்கிக்கு முன்பாகவிருந்து பேரணி ஆரம்பமாகும்.

முன்னிலை சோசலிஸ கட்சி

முன்னிலை சோசலிஸக் கட்சியின் மேதினக் கூட்டம், கொழும்பு-கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நடத்தப்படும்.

புதிய நகர மண்டம்

சோசலிஸ சமத்துவக் கட்சியின் மேதினக் கூட்டம் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடத்தப்படும்.

நுகேகொடையில்

ஸ்ரீ லங்கா கொமினியூஸ் கட்சி மாற்றுக்குழுவின் மேதினக்கூட்டம், நுகேகொட ஆனந்த சமரகோன் மைதானத்தில் இடம்பெறும்.