மோதலே ஹெரோய்ன் கைப்பற்ற காரணம்’

போதை வர்த்தக குழுக்களிடையே ஏற்பட்டுள்ள மோதலே பேருவளை கடற்பரப்பில் 231.54 கிலோகிராம் ​ஹெரோய்னைக் கைப்பற்ற காரணமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள பொலிஸ் ​போதைபிரிவு ​அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இலங்கையில் கைப்பற்றப்பட்டுள்ள ​ஹெரோய்ன் தொகைகளில் நேற்று (5) இரவு பேருவளை கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட 231.54 கிலோகிராம் ஹெரோய்னானது இலங்கை வரலாற்றில் கைப்பற்றப்பட்ட இரண்டாவது மிகப் பெரிய தொகை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி ஒருகொடவத்தை பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்ட 261 கிரோகிராம் ஹெரோயி​னே இலங்கை வரலாற்றில் கைப்பற்றப்பட்ட பாரிய தொகை ஹெரோய்ன் எனவும் அவர் கூறினார்.

நேற்று இரவு பேருவளை- பலப்பிட்டிய கடற்பரப்புகளுக்கு இடையே கடற்பரப்பிலிருந்து 3 கடல் மைல் தூரத்தில் இலங்கைக்கு ​கொண்டுவரப்பட்ட பாரிய தொகையான 231 கிலோ 54 கிராம் ஹெரோய்னை படகு ஒன்றின் மூலம் கொண்டு வந்த இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இந்த ஹெரோய்ன் 2778 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமானதெனவும் அவர் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் முறையே 38, 34 வயதுடையவர்களெனவும், அவர் தெரிவித்தார்.

குறித்த ஹெரோய்ன் 214 பொதிகளாகப் பொதி செய்யப்பட்டு பாகிஸ்தான் என்று பெயரிடப்பட்ட சீனி கொண்டு வரப்படும் உர பை மூலம் 11பைகளில் மூலம் கொண்டு வரப்பட்டிருப்பதால் குறித்த ஹெரோய்ன் பாகிஸ்தானிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாமெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.