யாழில் தமிழ் பேசும் பொலிஸார் அதிரடி

யாழில் தற்போது மீண்டும் தலை தூக்கியுள்ள வாள் வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு தமிழ் பேசும் பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்குவேலியில் ரவுடிக் கும்பல் ஒன்றின் வாள் வெட்டினால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். குடும்பஸ்தர் தனது வீட்டுக்கு முன்னால் நின்றபோது திடீரென்று மோட்டார் சைக்கிளில் வந்திறங்கிய இளைஞர் குழு இவரை சரமாரியாக வாளால் வெட்டியது. தலை, கழுத்து, கை, கால் போன்ற பல இடங்களிலும் வெட்டுக் காயங்களுக்கு இலக்கான அவரை உறவினர்கள் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், குறித்த கொலைச் சம்பவத்திற்கு பொலிஸாரால் தேடப்பட்டு வரும் இளைஞர் ஒருவரே காரணம் என கூறப்படும் நிலையில், குறித்த இளைஞரை தலைவராக கொண்ட ரவுடிக் கும்பலையும் பொலிஸார் தேடி வருகின்றனர். இதே போன்று, மல்லாகத்திலும் நேற்று முன்தினம் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த நிலையிலேயே குறித்த குழுக்களை கண்டறிவதற்கு தமிழ் பேசும் பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளனர்.

எனவே எந்தவித பயமும் இன்றி குறித்த வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் பற்றி ஏதேனும் அறிந்திருந்தால் உடனடியாக பொலிஸாருக்கு தெரியப் படுத்தி, குற்றவாளிகளை கைது செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கவும் என யாழ். பொலிஸார் கோரியுள்ளனர். இதேபோல் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கும் குறித்த நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் அறிந்தால் அறிவிக்க முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.