யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலைக்கு நீதிகோரி அமைதியான முறையில் யாழ்,மட்டக்களப்பு,பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய கவன ஈர்ப்பு போராட்டம்…….

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலைக்கு நீதிகோரி அமைதியான முறையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய கவன ஈர்ப்பு போராட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான மகஜர் கையளிப்புடன் நிறைவுக்கு வந்துள்ளது. இந்த மகஜரானது யாழ். பல்கலைக்கழக அனைத்துப் பீட மாணவர் ஒன்றியத் தலைவர்களினால் யாழ் அரசாங்க அதிபர் மற்றும் வட மாகாண ஆளுனர் சார்பாக அவரது பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டு அவர்கள் ஊடாக ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் போராட்டம் அமைதியான முறையில் முடிவுற்றது. இதனையடுத்து துண்டிக்கப்பட்டிருந்த ஏ9 வீதியூடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியதுடன் யாழ் மாவட்ட செயலக பணிகளும் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதேவேளை மாணவர்களின் போராட்டத்தில் பொலிஸார் கடமையில் ஈடுபடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


இதேவேளை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை யாழ் பல்கலைக்கழகத்திலுள்ள எந்தவொரு பீடங்களிலும் கல்விச் செயற்பாடுகள் நடைபெறமாட்டாது என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இன்று யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சார்பாக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் கந்தசாமி ரஜிவன் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இறந்த இரு மாணவர்களுக்கும் நட்டஈடு வழங்கப்பட வேண்டும், சிறு வயதிலிருந்து அவ்விரு மாணவர்களையும் வளர்ப்பதற்கு ஏற்பட்ட செலவையும் அவ்விரு மாணவர்கள் வேலை செய்வதன் மூலம் கிடைக்கின்ற தொகையையும் அவ்விரு பெற்றோர்களுக்கும் இழப்பீட்டுத் தொகையை மாதாந்தம் வழங்க வேண்டும். மாணவி வித்தியா கொலை வழக்கிற்கு நீதி கிடைக்காதது போல் எமது மாணவர்களுக்கும் நீதி கிடைக்காமல் போவதை தவிர்க்கவேண்டும்.

அமைதி வழியில் மேற்கொள்ளப்படும் இப்போராட்டத்திற்கு நீதி கிடைக்காதுவிடின் வேறு வடிவங்களில் போராட்டம் திசை திருப்பப்படும். எமது மாணவர்கள் இப்போதும் கொந்தளிப்புடனேயே உள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவருடைய உரையை சிங்கள மொழியில் சட்ட பீட மாணவன் சாமர, ஆங்கிலத்தில் மருத்துவ பீட மாணவ ஓன்றியத் தலைவர் ஏ.அலெக்ஸ் ஆகியோர் வாசித்தனர்.

நீதி கோரி கிளிநொச்சியில் மாபெரும் கண்டனப் பேரணி-
பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும் அவர்களுக்கு நீதி கோரியும் இன்றுகாலை கிளிநொச்சியில் கண்டனப் பேரணி இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களின் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இப்பேரணி, கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் இருந்து ஆரம்பித்ததுடன் பொலிஸ் அராஜகம் ஒழிக, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியவாறும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தைச் சென்றடைந்தது. அங்கு மேலதிக அரசாங்க அதிபரிடம் கண்டன மனுவினை பேரணியில் கலந்து கொண்டோர் கையளித்தனர். இந்த பேரணியில், பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள், சிவில் பொது அமைப்புக்கள், வர்த்தகர்கள், தமிழ் கட்சிகளின் பிரமுகர்கள், கல்விச் சமூகத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.

மாணவர்கள் கொலையை கண்டித்து கிழக்கிலும் ஆர்ப்பாட்டம்-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு – கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள் இன்று பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்றுகாலை 10.30 அளவில் கல்லடி, சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் முன்பாக ஒன்று திரண்ட மாணவர்கள் யாழில் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இதன்போது மாணவர்களின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான பல்வேறு பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்ததுடன் படுகொலைக்கு எதிரான கோசங்களையும் எழுப்பினர்.

இந்தக் கொலை தொடர்பில் நீதியான விசாரணை நடைபெற வேண்டும் எனவும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த கால யுத்தம் காரணமாக பெரும் கஸ்டத்தின் மத்தியில் கல்வியை தொடர்ந்து இன்று பல்கலைக்கழகம் வரை செல்லும் தமிழ் மாணவர்கள் மீது இவ்வாறான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என மாணவர்கள் கூறியுள்ளனர்.

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உட்பட தமிழ் மாணவர்கள் கடத்தல் காணாமல் போதல் சம்பங்கள் என வட, கிழக்கில் பல்வேறு சம்பவங்கள் கடந்த காலத்தில் நடைபெற்றுள்ள நிலையில் இதுவரையில் தமக்கான நீதி வழங்கப்படாதுள்ள சந்தர்ப்பத்தில் தற்போது, குறித்த மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்பாட்டம்-
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். கண்டி – கொழும்பு பிரதான வீதியில் கலஹா சந்தியில் இன்று இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது. இனவாதத்தை தூண்டி ஆட்சியதிகாரத்தை தக்க வைக்கும் முயற்சி என அவர்கள் தமது கண்டனத்தின் போது தெரிவித்தனர்.
பேராதனைப் பல்கலைக் கழக அனைத்து பீடங்களினதும் சுமார் 1000 மாணவர்கள் இதில் பங்கு கொண்டனர்.