ரணில் – சரத் பொன்சேகா புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து!

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தலைமைத்துவத்திலான ஜனநாயகக் கட்சி இன்று ஐக்கிய தேசிய முன்னணியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டது. அலரி மாளிகையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் ஜனநாயகக் கட்சி சார்பில் அதன் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் கையொப்பமிட்டனர். அதன் பின்னர் தமது உடன்படிக்கை தொடர்பில் கட்சித் தலைவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்ததாவது, நான் தனிப்பட்ட ரீதியில், ஐக்கிய தேசியக் கட்சியின் மூலமே அரசியலை ஆரம்பித்தேன். ஐக்கிய தேசியக் கட்சியுடன் எனக்கு உறவு இருந்தது. நாம் அர்ப்பணிப்புடன் ஜனாதிபதியை தெரிவு செய்து கொண்டோம். குறிப்பாக ஐக்கிய தேசிய முன்னணியுடன் நான் இருக்க வேண்டும் என பொதுத்தேர்தலின் போது ஜனாதிபதி எனக்கு சமிக்கையொன்றை வழங்கினார்.

வெற்றிலையை மாவினால் மூடி சதித்திட்டம் செய்வோருடன், எமக்கு அரசியல் பயணத்தை முன்னெடுக்க முடியாது. இரண்டு கால்களையும் இரண்டு திசைகளில் வைத்துக்கொண்டு இந்தப் பயணத்தைத் தொடர முடியாது. ஆகவே, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கு எமது பலத்தினை வழங்கி முன்னோக்கி பயணிப்பதற்காக அர்பணிப்புடன் செயற்படுவோம்.

பிரதமர் ரணில் தெரிவித்ததாவது, 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட புரட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்துக்கொண்டு பயணிப்பது எமது எதிர்பார்ப்பாகும். அதன் காரணமாகவே இந்த அழைப்பினை நாம் ஏற்றுக்கொண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு சென்றோம். நாட்டு மக்களை இணைத்துக் கொண்டு ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கே நாம் இந்தப் பயணத்தை தொடருகின்றோம்