ராஜிவ் கொலையாளிகள் விடுதலை லோக்சபாவில் காங்கிரஸ் எதிர்ப்பு

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு, பார்லி.,யில், காங்கிரஸ் கட்சியினர், நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விஷயத்தில், காங்., – அ.தி.மு.க., – எம்.பி.,க்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுவிக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய அரசின் கருத்தை கேட்டு, கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.இது தொடர்பாக, நேற்று காலையில், மூத்த காங்., எம்.பி.,க்களுடன் சோனியா ஆலோசனை நடத்தினார்.

இந்த விவகாரம் தொடர்பாக, லோக்சபாவில், ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டுமென்று வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில், சபாநாயகரிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.இந்த விவகாரத்தை, லோக்சபா காலையில் கூடியதும், காங்கிரஸ் பார்லிமென்ட் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே கிளப்பினார்.

அவர் பேசுகையில், ”முன்னாள் பிரதமரை படுகொலை செய்தவர்களை, விடுவிப்பதை
ஏற்க முடியாது. இதுதொடர்பாக மத்திய அரசு, தன் மறுப்பை உடனடியாக தெரிவிக்க வேண்டும். தமிழக அரசின் கடிதத்தை ஏற்க கூடாது,” என்றார்.

சபை கூடி, ஒரு சில நொடிகளே ஆனதால், இந்த விவகாரம் குறித்துதான் காங்கிரஸ் சார்பில் பிரச்னை கிளப்பப்படுகிறது என்பதை அ.தி.மு.க., – எம்.பி.,க்களால் அறிந்து கொள்ள முடியவில்லை.

பின், அ.தி.மு.க., – எம்.பி.,குமார், தமிழக அரசின் கடிதம் குறித்துதான், காங்கிரஸ் பிரச்னையை கிளப்புகிறது, என்பதை அறிந்தவுடன், கட்சியின் மற்ற எம்.பி.,க்களை, ‘அலெர்ட்’ செய்தார். உடனடியாக, அ.தி.மு.க., – எம்.பி.,க்கள் அனைவரும் சுதாரித்தனர். ‘தமிழக அரசின் கடிதத்தை ஏற்க கூடாது என்பதற்கு சொல்ல நீங்கள் யார்’ என, வாதிட ஆரம்பித்தனர். அ.தி.மு.க., – எம்.பி.,க்கள் பலரும், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட ஆரம்பித்ததும், நிலைமை சிக்கலானது. அ.தி.மு.க.,வினரின் எதிர்ப்புக்கு, காங்கிரஸ் எம்.பி.,க்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இரு தரப்புக்கும் இடையில் சில நிமிடங்கள் வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்டது.

இதையடுத்து, மல்லிகார்ஜுன கார்கே பேச அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது, ”படுகொலை செய்யப்பட்டவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர். அவரை கொன்றவர்களை விடுதலை செய்யவே கூடாது. இது குறித்த தமிழகஅரசின் கோரிக்கையை ஏற்க கூடாது. அந்த கடிதத்தை பரிசீலிக்கவே கூட கூடாது. இதுகுறித்து உள்துறை அமைச்சர் விளக்க வேண்டும்,” என்றார்.மீண்டும், அ.தி.மு.க., – எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதை அடுத்து, சபையில் இருந்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார்.

ஏழு பேரை விடுதலை செய்வது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும்.