ரிஷாட் விவகாரம்; சிறுபான்மை கட்சிகளின் நிலைப்பாடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 பேரில், எட்டுபேர், யோசனைக்கு ஆதரவளிப்பதற்குத் தீர்மானித்துள்ளனர் என அறியமுடிகின்றது. அவர்கள், தங்களுடைய யோசனைகள், கருத்துகளை, ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர்களுக்கு அனுப்பிவைத்துள்ளனர் என அறியமுடிகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச அரசியல்வாதிகளே, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளனர் என அறியமுடிகின்றது.

எது எவ்வாறாயினும், நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாரம் கூடி ஆராயவுள்ளது. அத்துடன், நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலும் கலந்துரையாடி, இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது.

‘கட்சி முடிவு​எடுக்கும்’

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் நாடாளுமன்றக் குழு கூடிதான் முடிவெடுக்கும் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், அதற்கு நாம் கட்டுப்படுவோம் என்றார். ஆனால், சில உறுப்பினர்கள் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கலாம்.

ஆனால், அமைச்சர் ரிஷாட் தொடர்பான விடயத்தில், தமிழ் மக்கள், அவர் மீது கோபமாக இருக்கின்றனர் என்றார். இந்தத் தீர்மானம், அரசியல் ரீதியான பழிவாங்கலா அல்லது கொண்டுவரப்பட்ட காலப்பகுதி என்பவற்றை ஆராய்ந்து கட்சி எடுக்கும் முடிவுகளிலேயே தங்கியுள்ளது என்று தெரிவித்த அவர், தனது தனிப்பட்ட அபிப்பிராயத்தை விட கட்சியின் தீர்மானத்துக்குக் கட்டுப்படுவதாகவும் தெரிவித்தார்.

‘ஆதரவளிப்பதே தனிப்பட்ட முடிவு’

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதே தனது தனிப்பட்ட அபிப்பிராயம் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், “இது தொடர்பில் தமது கட்சியின் தீர்மானம் என்னவென்பது குறித்து, நாளை (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ள கட்சியின் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்” என்றார்.

‘ஆதரவளிக்கவே தீர்மானம்’

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகச் செயற்படவுள்ளதாக, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்டக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியின் தீர்மானம் எவ்வாறு இருந்தாலும் பரவாயில்லை, தனது தனிப்பட்ட தீர்மானமாக, அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகவே வாக்களிப்பதாகவும், தனது முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

‘சமர்ப்பித்ததும் தீர்மானிப்போம்’

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸூம் இது தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முத்துசிவலிங்கம் தெரிவித்துள்ளதோடு, குறித்த பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதும் அது தொடர்பில் தீர்மானிப்போம் என்றார்.

‘கூட்டணி தீர்மானிக்கும்’

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், அமைச்சர் இராதாகிருஷ்ணனின் இந்த அறிப்பை, மலையக மக்கள் முன்னணியும் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் மறுத்துள்ளதோடு, இது தொடர்பில் இன்னும் கலந்துரையாடப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளன.

அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு மலையக மக்கள் முன்னணி ஆதரவளிக்காதென தலைவர் அறிவித்திருந்தாலும்,

அது கட்சியின் தீர்மானம் இல்லை எனவும் கூட்டணியினர் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை எனவும், அம்முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர் தெரிவித்தார்.

இதேவேளை, அமைச்சர் இராதாகிருஷ்ணனின் கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்தெனவும், இது தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி இன்னும் கலந்துரையாடவில்லை எனவும், 22ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டணியின் உயர் மட்டக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடி உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடுவோம் எனக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த 15ஆம் திகதி, தமிழ் முற்போக்குப் கூட்டணியின் கூட்டம் ஒன்று நடைபெற்றதாகவும், இதில், அமைச்சர் இராதாகிருஷ்ணன் கலந்துகொள்ளவில்லை எனவும், கூட்டத்தில் கலந்துகொள்ளாது, இது தொடர்பில் கூட்டணியின் நிலைப்பாட்டையும் அறிந்துகொள்ளாது, அமைச்சர் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருப்பதற்கும் கூட்டணியின் எம்.பிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாளை (21) நடைபெறும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஆராயப்படும் எனவும், இதன் பின்னரே, அதனை நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கான நாள் தீர்மானிக்கப்படும் எனவும் கூட்டணியின் எம்.பி ஒருவர் தெரிவித்தார்.

எனவே, 22ஆம் திகதி நடைபெறும் கூட்டணியின் உயர் பீடக் கூட்டத்தில் இது தொடர்பில் ஆராயப்பட்டு உத்தியோகபூர்வ அறிவிப்புகளை வெளியிடுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.