வடக்கு விவகாரத்தால் வவுனியாவில் கைகலப்பு

வடமாகாண முதலமைச்சரின் ஆதரவாளர்களுக்கும், வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் வவுனியா மாவட்ட செயலகத்துக்கு முன்பாக, மோதல் சம்பவம் ஒன்று நேற்று (19) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களால், வடமாகாண சுகாதார அமைச்சருக்கு ஆதரவாக, வவுனியா மாவட்ட செயலகத்துக்கு, முன்பாக நேற்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, வடமாகாண சுகாதார அமைச்சர், ஊழல் அற்றவர் எனவும் அவருக்கு சுகாதார அமைச்சு பதவியை தொடர்ந்தும் வழங்க வேண்டும் எனவும், முதலமைச்சர் நீதியாகச் செயற்பட வேண்டும் எனவும் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். அத்துடன், பல்வேறு சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். அதுமட்டுமன்றி, வடமாகாண சுகாதார அமைச்சரின் புகைப்படத்தையும் ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட் வேளையில், அங்கு வந்த பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலரும், இளைஞர்களும் குறித்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள வேண்டாம் எனவும் முதலமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யவிட மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையில், வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. அது கைகலப்பாக மாறிவிட்டது.    ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்தில் ஏற்பட்ட, பதற்றமான நிலைமையை அடுத்து வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர், அங்கு விரைந்தனர். அதன் பின்னரே நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து, அவ்விடத்திலேயே, வீதியின் ஒரு பகுதியில் அமைச்சர் சத்தியலிங்கத்தின் ஆதரவாளர்களும், மறுபக்கம் முதலமைச்சரின் ஆதரவானவர்களும் நின்றிருந்தனர். இருப்பினும் பொலிஸார் இரு பகுதியினருடனும் பேசி அவ்விடத்தில் இருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியதையடுத்து அவர்கள் சென்றுவிட்டனர்.

அமைச்சர் சத்தியலிங்கத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா மற்றும் தமிழரசுக் கட்சியின் வவுனியாக் கிளை உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.