வருடாந்த திருவிழாவை கொண்டாட இராணுவத்தினர் அனுமதி

யாழ்ப்பாணம், பலாலியில் மீள்குடியேற்றம் செய்யப்படாத பகுதியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா தேவாலயத்தின் வருடாந்த உற்சவத்தைக் கொண்டாட, பலாலி பாதுகாப்புப் படைத் தலைமையகம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 26 வருடங்களுக்கு மேலாக, அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து, பல்வேறு பிரதேசங்களில் வசித்து வருகின்றார்கள். இந்நிலையில், பலாலி வடக்கு ஜே-254 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 1,500 குடும்பங்கள், இந்தத் திருவிழாவைக் கொண்டாடுவார்கள்.

புனித ஆரோக்கிய மாதா தேவாலய வருடாந்தத் திருவிழா, இம்மாதம் 29ஆம் திகதியன்று, கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதியன்று, திருவிழா திருப்பலியுடன் நிறைவுபெறுவது வழமை.

யுத்தத்தின் பின்னர், தேவாலயத்துக்கு சென்று வழிபாடுகளை செய்வதற்கு, இராணுவத்தினர் அனுமதி மறுத்த நிலையில், கடந்த 2010ஆம் மாத்திரம் செல்ல அனுமதியளித்தனர். பின்னர் கடந்த 5 வருடங்களாக அப்பகுதிக்குச் செல்ல இராணுவத்தினர் அனுமதியளிக்கவில்லை. இந்;நிலையில், அப்பகுதி மக்கள், யாழ். ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்து, திருவிழாவைக் கொண்டாட யாழ். மாவட்ட பாதுகாப்புப் படைத் தலைமையகத்திடம் அனுமதி பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

அதனையடுத்து, திருவிழாவைக் கொண்டாட, இராணுவத்தினர் அனுமதி அளித்துள்ளனர். எதிர்வரும் 8ஆம் திகதி காலை 8.00 மணிக்கு, கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி திருநாள் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.