வல்வெட்டித்துறையில் ஆட்சியமைப்பது குறித்து சுயேட்சையுடன் கூட்டமைப்பு பேச்சுகளில்

அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில், வல்வெட்டித்துறை நகர சபை, காரைநகர் பிரதேச சபை, நெடுந்தீவு பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து சுயேட்சைக் குழுக்களுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பேச்சுகளை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வல்வெட்டித்துறை நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏழு ஆசனங்களைப் பெற்றுள்ள நிலையில், பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைப்பதற்கு மேலும் இரண்டு ஆசனங்கள் தேவையாகவுள்ளன.

இந்நிலையில், வல்வெட்டித்துறை நகர சபையில் நான்கு ஆசனங்களைப் பெற்றுள்ள சுயேட்சைக் குழுவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஊர் மக்களின் பிரசன்னத்தோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அறியக் கிடைக்கின்றது.

அந்தவகையில், இச்சந்திப்பில் பங்கேற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதி, ஒரே குழுவாக ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைக்குமாறும் சுயேட்சைக் குழுவுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு நகர சபைத் தலைவர் பதவியை வழங்குவதற்கு உறுதியளிப்பதாகவும் கூறியுள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில், சுயேட்சைக் குழுவினர் தமது நகர சபைத் தலைவர், உப தலைவர் ஆகியோருடன் இரண்டாண்டுகளுக்கு ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கோரியுள்ளதுடன், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்தான தலைவர், உப தலைவருடனான அவர்களின் ஆட்சிக்கு ஒத்துழைப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறாக, வல்வெட்டித்துறை நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதற்கான பேச்சுக்கள் காணப்படுகின்ற நிலையில், சுயேட்சைக் குழுவுடன் ஒரே குழுவாக இயங்குவது சாத்தியப்படாதவிடத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்து ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இதற்கு எதிரணியிலிருந்து சுயேட்சைக் குழு குழப்பாது, ஆட்சி இடம்பெறுவதற்கு ஆதரவளிக்கும் எனக் கூறப்படுகிறது.

இதேவேளை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் 15 ஆசனங்களைப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நான்கு ஆசனங்களைப் பெற்றுள்ள சுயேட்சைக் குழுவுடன் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து அக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தவிர, காரைநகர் பிரதேச சபையிலும் மூன்று ஆசனங்களைப் பெற்ற சுயேட்சைக் குழுவுடன் மூன்று ஆசனங்களைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பது குறித்து பேச்சுவார்த்தையிலீடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நெடுந்தீவு பிரதேச சபையில் ஆறு ஆசனங்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பெற்றுள்ளபோதும் இரண்டு ஆசனங்களை வென்றுள்ள சுயேட்சைக் குழுவுடன் ஆட்சியமைப்பது குறித்து நான்கு ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தியபோதும் குறித்த பிரதேச சபையில் அதிக ஆசனங்களைப் பெற்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஆட்சியமைக்க வழிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, நல்லூர் பிரதேச சபையில் ஆறு ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இரண்டு ஆசனங்களைப் பெற்ற சுயேட்சைக் குழுவுடன் ஆட்சியமைப்பது குறித்து பேசப்போவதாக தெரிவிக்கப்படுகிறது.