வில்பத்து பிரச்சினையில் மூன்று நற்செய்திகள். இன்னுமொரு நல்ல செய்தியும் இன்று வருகிறது!

வில்பத்து காணி சுவீகரிப்புக்கெதிரான மக்களின் போராட்டம் இன்று 32 வது நாளாக மறிச்சுக்கட்டியில் நடைபெற்று வருகிறது. தமது மண் தமக்கு வேண்டுமென்று அரசை வலியுறுத்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஏற்பாட்டில் இரவு பகல் பாராமல் அங்கு நடைபெறுகின்ற போராட்டத்திற்கு நாட்டின் பல பகுதிகளையும் சேர்ந்த மக்கள் தமது ஆதரவைத்த தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று போராட்ட களத்தில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் இணைப்புச் செயலாளரும் முசலி மண்ணைச் சேர்ந்தவருமான அலிகான் ஷரீப் உரையாற்றினார். அவர் தனது உரையில்,

”கடந்த இரண்டு தினங்களாக எமது இந்தப் பிரச்சினைகள் பற்றி எங்களது அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் ஜனாதிபதியோடு கலந்து பேசி ஒரு முடிவைப் பெற்றிருப்பதாக எங்களுக்குச் செய்திகள் கிடைத்திருக்கின்றன. இன்று பிற்பகலில் அந்தச் செய்தி பற்றி உங்களுக்குத் தெளிவுபடுத்தப்படும். நாங்கள் அந்தச் செய்திக்காகக் காத்திருக்கின்றோம். அது மிகவும் நல்ல செய்தியாக இருக்கும். பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நீதியும் நிவாரணமும் கிடைக்கும் செய்தியாகவும் அது இருக்கும்.

அதுமட்டுமல்ல, எங்களது இந்த 31 தினங்களான போராட்டத்தில் எங்களுக்கு மூன்று செய்திகள் இதுவரை வந்துள்ளன. ஒரு செய்தி, ஜனாதிபதி அவர்களுடையது. ‘நான் இந்தக் காணிப் பிரச்சினையை, காணி எல்லையை மீள் பரிசீலனை செய்து ஏற்ற நடவடிக்கைகளை எடுப்பேன்.’ என்று ஜனாதிபதி கூறியிருக்கின்றார். இரண்டாவது பிரதம மந்திரியின் செய்தி. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகப் பிரதம மந்திரி ஒரு குழுவை அமைத்து இது பற்றி அலசி ஆராய்ந்து இந்த மக்களுக்கான தீர்வைப் பெற்றுத் தருவதாகக் கூறியிருக்கிறார். மூன்றாவது செய்தி, முள்ளிக்குளம் கடற்படை முகாமிலிருந்து அதிகாரி வந்து, வில்பத்து காணி எல்லையை மீள் பரிசீலனை செய்வதற்குத் தான் யோசித்துக் கொண்டிருப்பதாகவும் எனவே போராட்டத்தைக் கைவிட்டு அந்த மக்களை அமைதியாக இருக்குமாறு சொல்லுங்கள் என்று ஜனாதிபதி தன்னிடம் கூறியதாகவும் சொன்ன செய்தி. இந்த மூன்று செய்திகளுக்கு மத்தியில்தான் நாங்கள் இன்னுமொரு நிறைவான செய்தியை இன்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.!” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இந்த விடயங்களையெல்லாம் அறிந்து கொண்டோ என்னவோ ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவசர அவசரமாக இரண்டொருவரைக் கூட்டிக் கொண்டு முசலிக்கு வந்திருப்பதாக அங்குள்ளோர் தெரிவித்துத் தமது கடும் கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

(எஸ். ஹமீத்)