விளாமரம்


அண்மையில் நண்பரொருவர் “ஒரு விளாம்பழம் நூறு ரூபாய்க்கு வாங்கினேன்” என்றதைக் கேட்டபோது, யாரும் விளாத்தியை ஏன் வளர்ப்பதில்லை என்று யோசித்தேன்.

தமிழகத்திற் பல இடங்களில் வளர்க்கப்படும் விளா, இலங்கையில் வளர்ப்புக்குரிய மரமல்ல. மனித நடமாட்டமற்ற பகுதிகளிற் கவனிப்பே தேவையின்றித் தானாய் வளர்ந்து பலன் தரும். சைவ மதச் சடங்குகளில் கட்டாயமாக இருக்கும் ஒரு பழமாயினும், மரம் நீரைப் பெரிதும் எதிர்பாராமல் வளர்வதாயினும் எம்மவர் விளாமர வளர்ப்புப் பற்றி ஒருவித கரிசனையும் எடுப்பதில்லை என்பது கவலை தருவது.

சிவனுக்கு மிகப்பிடித்த ஐந்து வில்வவகை இலைகளில் விளா ஒன்று (மற்றையவை நொச்சி, கிளுவை, வில்வம், மாவிலங்கை) என்பது பலருக்குத் தெரியாதது. விசாக நட்சத்திரக்காரருக்கு வீட்டில் இருக்கவேண்டிய மரமென்றும் இதைச் சொல்கிறார்கள். மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமான (கொடிமரம் இல்லாத) திருநின்றியூரின் தலவிருட்சமும் விளாதான். திருக்காறாயில், தீயத்தூர், நத்தம், அத்தாளநல்லூர், கபிஸ்தலம் போன்றவற்றிலும்கூட தலவிருட்சம் இதுவே.

விரைவிற் பட்டுப்போகாத மரம் என்பதால் இதில் வேறு பயன்தரும் மரங்களை (உதாரணம்: எலுமிச்சை) ஒட்டுவதும் உண்டு. மிக இலகுவாகப் பதிய முறையில் விளாமரம் உண்டாக்கப்படலாம். எமது மண்ணுக்கே உரித்தான பழங்களை/ மரங்களை நாமே பாதுகாக்கவும், பரவலாக்கவும் வேண்டும். இது அடர்த்தியாக வளராது என்பதால் இடத்தைப் பிடிக்காது. ஒரேயொரு மரம் நூறு பழங்களைத் தருமென்றால்,சும்மா இருக்கப் பத்தாயிரம் ரூபாய் கிடைக்குமே! பத்து மரங்களெனில்…?

ஒவ்வாமை, பசியின்மை என்பவற்றுக்கு மிகச்சிறந்த மருந்தாய்த் திகழும் இம்மரத்தைத் தரிசாய்க் கிடக்கும் காணிகளிலாவது நடலாம் அல்லவா?

(Thiagarajah Wijayendran)