விளைவை அரசு எதிர்கொள்ள வேண்டிவரும்!?

அரசியல் தீர்வொன்றை கொண்டு வர இனிமேலும் அரசு தயக்கம் காட்டுமானால் அந்த விடயமானது அத்தோடு மரணித்துப் போகும் விடயமாக இருக்கப் போவதில்லை. பிரச்சினைகள் தொடரும். அதனுடைய விளைவுகளை நாடும் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் அனுபவிக்க வேண்டி வரும். இவ்வாறு எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

எதிர்வரும் 9ம் திகதி பாராளுமன்றில் கொண்டு வரப்படவுள்ள அரசியல் அமைப்பு பேரவை குறித்த பிரேரணை தொடர்பிலும் அரசியல் தீர்வு குறித்தும் வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

புதிய அரசியல் சாசனத்தினூடாக அரசியல் தீர்வு கொண்டு வரும் அரசாங்கத்தின் முயற்சிகளை யார் ஆதரிப்பார்கள்? யார் எதிர்ப்பார்கள்? என்பது 9 ஆம் திகதியே தெரிய வரலாம். சர்வசன வாக்கெடுப்பொன்று நடாத்தப்படும் பட்சத்தில் மிக மிக குறைந்த அளவு எண்ணிக்கை கொண்டவர்களே அதை எதிர்க்கும் நிலையிருக்கலாம். ஆனால் பெரும்பான்மையான மக்கள் தமது ஆதரவின் மூலம் அரசியல் தீர்வொன்று கொண்டு வரப்படுவதையே முழு மனதுடன் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகின்றேன்.

அண்மையில் நடாத்தப்பட்ட மக்கள் கருத்து கணிப்பிலும் பெரும்பான்மையானவர் எதிர்க்காத நிலையே காணப்படுகிறது என்பதை அறியக்கூடியதாகவுள்ளது. புதிய அரசியல் சாசனம் சம்பந்தமாகவும் அதனூடாக ஏற்பட வேண்டிய தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாகவும் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்து வருவது அனைவரும் அறிந்த விடயமாகும். இக்கருமத்தில் முதல் விடயம் யாதெனில் புதிய அரசியல் சாசனத்தினூடாக தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண ஒரு புது சந்தர்ப்பம் உருவாகியிருக்கிறது.

சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய சந்தர்ப்பம் இருந்துங்கூட அதை நிறைவேற்றுவதற்கு அவருக்கு பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கவில்லை. அது மட்டுமன்றி விடுதலைப்புலிகளின் ஒத்துழைப்பின்றி அக்கருத்தை நிறைவேற்றுவதும் கடினமான காரியமாக இருந்தது. இதற்குப் பின்னும் எந்தவொரு அரசாங்கத்துக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கவில்லை. மஹிந்த ராஜபக்ச குறுகிய கால அளவில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றிருந்தாலும் கூட அரசியல் தீர்வைக் கொண்டுவர அவர் முயற்சிக்கவில்லை.

தற்போதைய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றிருப்பது மாத்திரமல்ல. ஜனாதிபதி பிரதமர் ஆகியோர் தேசியப் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற அடிப்படையில் கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள். ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் இலங்கை ஒரு அனுசரணையாளனாக இருந்து கொண்டு நாட்டில் நிரந்தரமான நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் அரசியல் தீர்வொன்று கொண்டுவரப்பட வேண்டுமென்பதை ஏற்றுக்கொண்டது மாத்திரமன்றி வலியுறுத்தியும் இருந்தது.

தற்போதைய ஆளும் அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு அரசியல் சாசனம் உருவாக்கப்படுமாக இருந்தால் அது தேசிய இனப்பிரச்சினை என்பதைத் தீர்க்கக் கூடியதாக இருக்குமாக இருந்தால் பாராளுமன்றத்தில் ஐ.தே.கட்சியுடன் சேர்ந்து இயங்குகின்ற பெரும்பான்மை கட்சியான ஸ்ரீ.சுதந்திரக் கட்சியும் த.தே.கூட்டமைப்பும் ஒத்துழைப்பு வழங்கினால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தின் மூலம் பாராளுமன்றில் அரசியல் சாசனத்தை நிறைவேற்றக் கூடிய வாய்ப்பு இருக்கும்.

புதிய அரசியல் சாசனம் தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவினர் நாடு பூராகவும் சென்று மக்கள் கருத்துக்களை அறிந்து கொண்டு வருகின்றார்கள். அக்குழுவின் கணிப்பில் இனவாத அடிப்படையிலான கருத்துக்களையோ ஆலோசனைகளையோ முன்வைத்த வீதத்தினர் மிகமிகக் குறைவாகவே காணப்படுகின்றார்கள். பெரும்பான்மையானவர்கள் இனப்பிரச்சினைக்கு அரசியல் சாசனத்தின் மூலம் தீர்வு காணப்பட வேண்டுமென்ற கருத்தையே முன்வைத்துள்ளனர் என்பது அக்குழுவினரின் கருத்தாகும்.

நாடு பிரிக்கப்படாமல் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வழியொன்று ஏற்படுமாக இருந்தால் மக்கள் கூடுதலான ஆதரவை வழங்க தயாராகவுள்ளார்கள் என்பது இக்குழுவின் கருத்தாகும். எனவே தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான அரசியல் தீர்வொன்று கொண்டு வரப்படுமாக இருந்தால் அந்தத் தீர்வை முன்மொழியும் அரசியல் சாசனமானது பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் நிறைவேற்றப்படுவது மாத்திரமல்ல, சர்வசன வாக்கெடுப்பு நடாத்தப்பட்டாலும் பெரும்பான்மை மக்களின் அங்கீகாரத்தைப் பெறக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது என்பது எதிர்பார்க்கக்கூடிய விடயமாகும்.

இத்தகையதொரு சந்தர்ப்பமும் வாய்ப்பும் இருக்கும் சூழலில் அதை அடைவதற்கும் தமிழ் மக்களுடைய பங்களிப்பு ஆக்க பூர்வமாக இருக்க வேண்டும். இந்த இலக்கை இலட்சியத்தை அடையவே த.தே.கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு சம்பந்தமாக முன்னைய நாட்கள் தொட்டு இன்றுவரை நாம் பேசிவருகிற போதெல்லாம் வடகிழக்கு இணைப்பு சம்பந்தமாக நாம் தெளிவாகவும் உறுதியாகவும் கூறி வந்திருக்கின்றோம்.

வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணந்தான் மிக நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக்காலம் அதன் பின்பு ஜனாதிபதி பிரேமதாஸ, டி.பி.விஜயதுங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஆட்சி நடாத்திய காலத்தில் வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்ந்திருந்திருக்கிறது. 18 வருடங்களாக இவ்விணைப்பு தொடர்ந்து இருந்துள்ளது. இப்பதினெட்டு வருட காலத்திலும் இணைந்த வடக்கு, கிழக்கு வரவு செலவுத்திட்டத்தில் நிதியொதுக்கப்பட்டு வந்துள்ளது.

மஹிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு இலங்கையின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில மாதங்களுக்குள்தான் உச்ச நீதிமன்றில் வடகிழக்கு இணைப்பு தொடர்பில் மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சாதாரணமாக ஒரு விடயம் நடைபெற்றால் ஒரு மாதத்துக்குள் நீதிமன்றம் செல்ல வேண்டும். ஆனால் வடக்கு, கிழக்கு இணைப்பை பொறுத்தவரை 18 வருடங்களுக்குப் பின்னர் தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூன்று தமிழ் பிரஜைகள் அதாவது திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மூவர் தாம் சரித்திர ரீதியாக கிழக்கில் வாழ்ந்து வருகின்றவர்கள் என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றில் விண்ணப்பமொன்றை தாக்கல் செய்திருந்தார்கள். அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை. குறிப்பாக வெளிநாட்டு ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இவ்வழக்கின் தீர்ப்பின் போது பிரதம நீதியரசர் அவர்கள் ஜனாதிபதி ஜெயவர்த்தனா அவர்கள் மேற்படி இணைப்பை ஏற்படுத்திய நடைமுறையில் தவறு நிகழ்ந்திருக்கின்ற காரணத்தின் நிமித்தம் இணைப்பு செல்லுபடியாகாது என்ற தீர்ப்பை பிரதம நீதியரசர் வழங்கியிருந்தார்.

இந்த தீர்ப்பு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்ப்பு அல்ல. நடைமுறை ரீதியாக முன்னாள் ஜனாதிபதி ஜெயவர்த்தனா அவர்கள் தவறை விட்டிருந்தால் அந்த நடைமுறைத் தவறை திருத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். இது விடயம் தொடர்பில் பாராளுமன்றில் உரையாற்றி கேள்வி எழுப்பிய போது அன்றைய பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க அவர்கள் இவ்விடயத்தை அரசாங்கம் பரீசீலிக்குமென வாக்குறுதி அளித்தார்.

அது மட்டுமன்றி, மஹிந்த ராஜபக்ச அவர்களுடனும் இது விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தினோம். அவர் பிழை நடக்கவில்லையென வாதிட்டார். இணைப்பில் உள்ள நடைமுறைத் தவறைத் திருத்துங்கள். மீண்டும் இணைப்பை ஏற்படுத்துங்கள் என்று மஹிந்த ராஜபக்சவிடம் நாங்கள் கோரிய போது அவர் அதை மறுக்கவில்லை. அதைப் பரிசீலிப்போமெனக் கூறினார் என்று எதிர்க்கட்சித்தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க அவ்விதமான பிரேரணை பாராளுமன்றில் கொண்டு வரப்படுமானால் தனது கட்சியும் ஆதரவு நல்குமென அவர் கூறியிருந்தார்.

இவ்விடயம் எழுத்து மூலம் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் இணைப்பு நடைமுறையில் பிழையுள்ளது என்ற விடயம் திருத்தப்படவில்லை. அத்தகையதொரு பிழை இருப்பதாக நாங்கள் ஏற்றுக் கொள்ளவுமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக வடக்கு கிழக்கு இணைப்பென்பது ஒரு சர்வதேச ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தை ஒரு பகுதியினர் தன்னிச்சையாக மீற முடியாது. எங்களைப் பொறுத்த வரை இணைப்பில் நடைமுறைப் பிழை இருப்பதாக கூறப்பட்ட விடயத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

வடக்கு கிழக்கு தற்பொழுது எவ்வகையில் இயங்கினாலும் இது மீண்டும் இணைக்கப்பட வேண்டுமென்பது எமது நிலைப்பாடாகும். உச்ச நீதிமன்ற தீர்ப்பானது பிழையாக இருந்தாலோ சரியாக இருந்தாலோ பழைய நிலைமைக்கு இணைப்பு கொண்டு செல்லப்பட வேண்டுமென்பதுதான் நாம் எதிர்பார்க்கும் விடயமாகும். சட்ட ரீதியாக இது நியாயப்படுத்தப்படும் விடயமாகும். எனவே இணைக்கப்பட வேண்டுமென்பது எமது கருத்து மாத்திரமன்றி இது விடயம் தொடர்பில் நாம் எவருடனும் பேசத் தயாராக இருக்கின்றோம். வடக்கு, கிழக்கு ஒரு பிராந்தியமாக இருக்க வேண்டுமென்பது எமது உறுதியான நிலைப்பாடு.

அரசியல் தீர்வு சம்பந்தமாக இதுவரை நாம் அடைந்த முன்னேற்றங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அம்முன்னேற்றங்கள் உள்ளடங்கலாக மேலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டு ஒரு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டுமென்பது எமது கோரிக்கை மாத்திரமல்ல. எதிர்பார்ப்பும் கூட. அந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. ஆனால் சாசனமொன்றை உருவாக்கும் போது எல்லா இன மக்களும் சமூகங்களும் தமது கருத்துக்களை முன் வைப்பார்கள். உ+மாக பெளத்த சிங்கள மக்கள் முக்கிய பெளத்த மதத்துக்கு கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தை பேண விரும்புவார்கள்.

அதேபோன்று எல்லா இனமக்கள் தமது இன நிலை சம்பந்தமாக கருத்துக்களை முன் வைக்கலாம். அவை அனைத்தும் நியாயத்தின் அடிப்படையில் நிரந்தரமான தீர்வுக்கு அக்கருத்துக்கள் உதவுமாக இருந்தால் அக்கருத்துக்களை பாராளுமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில் நாட்டினுடைய நல்லிணக்கத்தையும் முன்னேற்றத்தையும் விரும்புகின்ற மக்கள் இன மத பேதத்துக்கு அப்பால் கொண்டு வரப்படும் தீர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கொண்டுவரப்படும் தீர்வை மக்கள் நிராகரித்தால் அல்லது பாராளுமன்றம் நிராகரித்தால் அதனுடைய விளைவுகளை நாடு எதிர்கொள்ள வேண்டி வரும். அதுபற்றி நாம் அச்சம் அடைய வேண்டியதில்லை. அரசியல் தீர்வொன்று இந்நாட்டில் இனிமேலும் கொண்டு வரப்படாவிட்டால் அந்த விடயமானது அத்தோடு மரணித்துப் போகும் விடயமாக இருக்கப்போவதில்லை. பிரச்சினைகள் தொடரும் அதனுடைய விளைவுகளை நாடும் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும்.