விவசாயக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மல்லப்பா தற்கொலை

ஆந்திரா.
அனந்த்பூர் மாவட்டம் .
கம்பதுரு மண்டல் பகுதி.
ராம்புரம் கிராமத்தைச் சார்ந்த
மல்லப்பா ஒரு விவசாயி.

பயிர் விளைச்சலில் இழப்பு ஏற்பட்டதால், விவசாயக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மல்லப்பா தற்கொலை செய்து கொண்டார்.இறந்த பிறகு தன்னுடைய இறுதிச் சடங்கிற்குத் தேவையான பொருள்களை வாங்கும் சுமையை குடும்பத்தினருக்குத் தரக்கூடாதென்று – அதற்குத் தேவையானப் பொருள்களை வாங்கி வைத்துவிட்டு
தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் மல்லப்பா.

தன் குடும்பத்தினருக்கு தனது நினைவாக இருக்கட்டுமே என்று தன்னுடைய
ஒரு புகைப்படத்தையும் லேமினேட்
செய்து வைத்திருந்திருக்கிறார்.

இத்துடன் –
தன் மனைவிக்கு வெள்ளைத் துணி, வளையல்கள், இறந்த பிறகு இறுதிச் சடங்கிற்குத் தேவைப்படும் பூமாலை போன்றவற்றையும் வாங்கிவந்த அவர் –
தனது விவசாய நிலத்துக்கு அருகிலுள்ள
தனது தந்தையின் சமாதி மீது வைத்து, கடிதம் ஒன்றையும் எழுதிவைத்தார்.

தனக்கு கடன் கொடுத்தவர்களுக்கு யாருக்கெல்லாம் எவ்வளவு தர வேண்டும் என்பதை அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார். கடன் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

எழுதப் படிக்கத் தெரியாத மல்லப்பா கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடம் கடிதம் எழுதி வாங்கி தனது பையில் வைத்திருந்தார்.

விஞ்ஞானத் தொழில்நுட்பப் புரட்சிக் காலத்தில்கூட …
இந்தியா தனது ஆயிரக்கணக்கான விவசாயப் புதல்வர்கள் தற்கொலை செய்து மடிவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது என்று
காலம் கண்ணீரோடு பதிந்துகொண்டிருக்கிறது.

பத்தோடு பதினொன்றாக
இந்தச் செய்தியையும்
கடந்து போய்க்கொண்டிருக்க பழக்கப்ப்படுத்தப்பட்டுவிட்டோம் நாம்.

(Rathan Chandrasekar)

ஆதாரம் /
BBC TAMIL