விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் தமிழகத்தில் இன்று பொது வேலைநிறுத்தம் :திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு

ரயில், பஸ் மறியல் போராட்டமும் நடத்த முடிவு

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கங் களின் கூட்டியக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கிறது. இதற்கு திமுக, காங்கிரஸ் அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) உள்ளிட்ட கட்சிகள், வணிகர் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

பஸ், ரயில் மறியல் பேராட்டமும் நடப்பதால் பொதுமக்கள் பயணத்தை தவிர்க்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு, தென்மேற்கு பருவ மழை பொய்த்துப் போனதால் 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரசு காவிரியில் தண் ணீர் திறந்துவிடாததால் விவசாய மும் அடியோடு பாதிக்கப்பட்டுள் ளது. இதையடுத்து 32 மாவட் டங்களையும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழக அரசு அறிவித்தது. வறட்சி நிவாரணமாக மத்திய அரசிடம் ரூ.39,565 கோடியை கோரியது. ஆனால், ரூ.1,748 கோடியை மட்டுமே மத்திய அரசு வழங்கியது. எனவே, பயிர் காப்பீட்டை மட்டுமே தமிழக அரசும், விவசாயிகளும் நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 20 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்களையும் சந்தித்து மனு அளித்தனர்.

இந்நிலையில், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். அண்டை மாநிலங்கள் புதிய அணைகள், தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று (3-ம் தேதி) பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், அதிமுக (புரட்சித் தலைவி அம்மா), கம்யூனிஸ்ட்கள், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. போராட்டம் குறித்து கூட்டியக்க தலைவர் பி.கே.தெய்வசிகாமணி கூறியதாவது:

எங்களின் போராட்டத்துக்கு அதிமுக (அம்மா), பாஜக தவிர மற்ற கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. வணிகர்கள் சங்கத் தலைவர் வெள்ளையன், நடிகர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. பொது வேலைநிறுத்தத்துடன் பஸ், ரயில் மறியல் போராட்டங்களும் நடத்தப்படும். சென்னையில் நடக்கும் போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.

விவசாயிகள் அந்தந்த கிராமங் களில் மறியலில் ஈடுபட வேண் டும். ஆதரவு தரும் கட்சிகள் விருப் பம் போல, தங்களது போராட்ட வடிவங்களை அமைத்துக் கொள்ள லாம். இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அதிக அளவில் போராட்டத்தில் பங்கேற்க வேண் டும். பஸ், ரயில் மறியல் போராட் டம் நடப்பதால் பொதுமக்கள் பயணத்தை தவிர்க்க வேண்டும். எங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், வேலைக்கு செல்லாமல் விடுப்பு எடுக்க வேண்டும். அறவழியில் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும். வன்முறை கூடாது. போராட்டத்துக்கு எதிராக தமிழக அரசு எவ்வித நடவடிக் கையும் எடுக்கக் கூடாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதே கோரிக்கையை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். திமுக, காங்கிரஸ், தமாகா, இந்திய கம்யூனிஸ்ட், அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) உள்ளிட்ட கட்சி களும் பல்வேறு போராட்டங்களை நடத்துகின்றன. போராட்டம் குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பின் விவசாயிகள் பிரிவு பொதுச்செய லாளர் பத்ரிநாத் சவுத்ரி கூறும் போது, ‘‘தமிழக விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’’ என வலியுறுத்தி யுள்ளார்.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில், வியா பாரிகள் கடையடைப்பு செய்ய வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளை யன் கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், ‘டெல்லியில் போராடிவரும் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றவும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா அரசுகள் நதிகளின் குறுக்கில் தடுப்பணைகள் கட்டுவதை தடுக்கவும் மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) கட்சி ஆதரவு அளிக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

ஆதரவு இல்லை

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்ரம ராஜா கூறும்போது, ‘‘விவசாயிகளின் போராட்டத்துக்கு எங்கள் பேரமைப்பின் ஆதரவு எப்போதும் உண்டு. அடுத்த மாதம் 5-ம் தேதி கடைகளை அடைத்துவிட்டுதான் வணிகர் சங்க மாநாட்டை நடத்த இருக்கிறோம். இதனால், தற்போது கடையடைப்பு நடத்தி ஆதரவு அளிக்க இயலவில்லை’’ என்றார்.

தமிழக விவசாயிகள் பாதி மொட்டையடித்து போராட்டம்

டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் நேற்று பாதி மொட்டையடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழக விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.40 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகள், மாணவர் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க விவசாயி கள் நாள்தோறும் பல்வேறு நூதன போராட்டங் களில் ஈடுபட்டு வருகின்றனர். சங்கு ஊதி போராட்டம், எலிக்கறி, பாம்புகறி உண்ணும் போராட்டம் என இதுவரை பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. 20-வது நாளான நேற்று விவசாயிகள் பாதி மொட்டையடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலையில் டெல்லி ராஜீவ் சோக் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஜந்தர் மந்தர் வரை கண்டன ஊர்வலம் நடத்தினர். இதில் டெல்லிவாழ் தமிழர்களும் பங்கேற்றனர்.

இன்றைய தினம் பாதி மீசையை மழித்து போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.