வீதி ஒழுங்கை மீறிய வடக்கு முதல்வர்!

யாழ்.குடாநாட்டில் பேருந்து சாரதிகள் மிக மோசமாக போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்கள் ஓட்டும் நிலையில் அதிகளவான விபத்துக்களும் இடம்பெறுகின்றன. இந்நிலையில் போக்குவரத்துச் சட்டங்களை அல்லது ஒழுங்குகளை மதிக்காத சாரதிகள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்டச் செயலர் என்.வேதநாயகன் சிலநாட்களின் முன் தெரிவித்துள்ள அதே வேளை, முதலமைச்சர் அலுவலகத்துக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற கடவையில் ரயில் வருவதற்கான சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்ட நிலையிலும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பயணித்த வாகனம் கடவையைக் கடந்து சென்ற சம்பவம், புதன்கிழமை (10) இடம்பெற்றது.

முதலமைச்சர் வாகனம் கடந்து செல்வதற்கு அங்கு கடமையிலிருந்து பொலிஸாரும் உடந்தையாக இருந்துள்ளனர். ரயில் வருகின்றதா என ரயில் பாதையைப் பார்த்து, வரவில்லையென்றவுடன் வாகனத்தை கடக்க பொலிசார் சைகையும் காட்டினர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர், இந்தக் கடவைக்கு அருகிலுள்ள பிறிதொரு பாதுகாப்பற்ற கடவையில் கடக்க முற்பட்ட கார் ஒன்று விபத்துக்குள்ளாகி, பொறியியலாளர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் முழங்காவிலில் பேருந்து நிலையத்தை திறந்து வைத்து சாரதிகள் கடைப்பிடிக்க வேண்டிய வீதி ஒழுங்குகள் பற்றி, தான் எழுதி வந்த நீண்ட உரையை வாசித்த முதல்வர் அதனை தனது சாரதிக்கும் வாசிக்க கொடுத்திருக்க வேண்டும். வேலைப்பழுவில் மறந்திருப்பார் போலும். அல்லது ஊருக்குத்தான் சட்டம் ஒழுங்கு முதல்வருக்கு இல்லையோ? .