வெட்கித் தலைகுனிவோம் – யாழில் 3 ஊடகவியலாளர்கள் பணி விலகல்

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு யாழ் ஊடகமொன்றில் பிரசுரிக்கப்பட்ட செய்தி தவறானது என சுமந்திரன் எம்.பி யினால் கொடுக்கப்பட்ட மறுப்பினை வெளியிட்டமை தொடர்பில் இரா.சம்பந்தன் குறித்த செய்தியை எழுதிய ஊடகவியலாளரும் அவரிற்கு ஆதரவாக இரு ஊடகவியலாளர்களும் தமது பணியினை இராஜினாமாச் செய்துள்ளதாக தெரிவிகப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனது மறுப்பு செய்தியில் குறித்த ஊடகவியலாளருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வாக்கியங்களும் இடம்பெற்றிருந்தமை மூத்த ஊடகவியலாளர்களால் விமர்சிக்ப்பட்டதோடு குறித்த மறுப்பில் செய்தி நிறுவனம் ஊடகவியலாளரை காட்டிக்கொடுத்துவிட்டது எனவும் விமர்சித்திருந்த நிலையில் குறித்த ஊடகவியலாளரும் அவருடன் பணியாற்றும் ஏனைய இரு ஊடகவியலாளர்களும் தங்களது பணி விலகல் கடிதத்தினைச் சமர்ப்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கூட்டமைப்பு தலைவர் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் “2016 தீர்வு எனது கணிப்பு மட்டுமே சம்பந்தன் திடீர் குத்துக்கரணம்” என தலைப்பிட்டு கடந்த திங்கட்கிழமை தலைப்பு செய்தியொன்றை வெளியிட்டிருந்தது.

இந்நிலை மறுநாள் செவ்வாய்க்கிழமை மறுப்பு செய்தியாக “விசுவாசமாக எல்லோரும் செயற்பட்டால் இந்த வருட இறுதிக்குள் தீர்வு காணப்படும் என்பதே எனது கணிப்பு” என்றே சம்பந்தன் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் கொடுத்த மறுப்பினை குறித்த ஊடகம் வெளியிட்டடிருந்தது.
அத்துடன் செய்தியில் பிரசுரத்திலே அதை எழுதிய செய்தியாளருடைய எண்ணக்கருத்துக்களுக்கும் விமர்சனங்களுக்கும் கூடுதல் இடமளித்திருப்பதை நாம் காணத்தவறமுடியாமல் உள்ளதென தனது ஊடகவியலாளர்களையே அது காட்டிக்கொடுத்துமிருந்தது.
இதனை தொடர்ந்தே சம்பந்தனின் செய்தியை அறிக்கையிட்ட ஊடகவியலாளர் தான் பணிவிலகுவதாக அறிவித்துள்ளதாக தெரியவருகின்றது. கொழும்பில் தலையாட்டுபவர்கள் போல தான் செய்தி அறிக்கையிட முடியாதென தெரிவித்துள்ள அவர் சம்பந்தன் பத்திரிகையாளர் மாநாட்டில் சொன்னவற்றை ஒலிப்பதிவு சான்றாக சமர்ப்பிக்க தான் தயாராக இருப்பதாகவும் சவால் விடுத்துள்ளார்.

கொழும்பைத் தளமாகக் கொண்டு யாழ்பாணத்தில் பிராந்திய பதிப்பை வெளியிட்டுவரும் குறித்த ஊடக நிறுவனம் கொழும்பில் கொடுக்கப்படும் அரசியல் அழுத்தங்களிற்கு அடிபணிவதாகவும் அதன் வெளிப்பாடே இவ்வாறாக ஊடகவியலாளலர்களைக் காட்டிக்கொடுக்கின்ற செயற்பாடுகள் நிகழக் காரணம் என பணிவிலகிய ஏனைய ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒருவர் குறித்ததான் செய்திக்கு இன்னொருவர் கொடுக்கும் மறுப்பு மற்றும் விளக்கங்களைப் பிரசுரிக்க முடியுமாயின் ஊடகங்கள் மீது பிரயோகிக்கப்படுகின்ற அரசியல் அழுத்தங்கள் வெட்கித் தலைகுனிய வைக்கிறது. இது தனிப்பட்ட நிறுவனம் சார்ந்த பிரச்சனை என மௌனித்து நிற்காது ஜனநாயகம் மிக்க ஊடக வெளியை உருவாக்கப் பாடுபடும் ஆர்வலர்களாக ஊடகங்கள் மீதான அரசியல் அழுத்தங்களிற்கு எதிராக குரல் எழுப்புவோம்.(ஆ-ர்)