வெனிசுவேலா தீ விபத்தில் 68 பேர் பலி

வெனிசுவேலாவில், சிறைச்சாலை ஒன்றிலிருந்து தப்பித்துச் செல்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சியின் போது ஏற்பட்ட தீ, தொடர்ந்தும் பரவியதன் காரணமாக, குறைந்தது 68 பேர் பலியாகினர் என, நாட்டின் பிரதம வழக்குத் தொடுநரும் சிறைக்கைதிகளின் உரிமைகளுக்கான அமைப்பொன்றும் தெரிவித்துள்ளனர். கரபொபோ மாநிலத்திலுள்ள பொலிஸ் தடுப்பு முகாமொன்றிலேயே, இச்சம்பவம் நேற்று முன்தினம் (29) இடம்பெற்றது.

30

சிறையுடைப்பை மேற்கொள்வதற்காக, மெத்தைகளுக்குத் தீ வைத்ததோடு, காவலர்களின் துப்பாக்கிகளைச் சிறைக்கைதிகள் களவாடிய போதே, இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் சிலர் உடல் கருகிப் பலியானதோடு, இன்னும் சிலர், மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் இருவர், சிறைக்கைதிகளைப் பார்வையிடுவதற்காக வந்திருந்த இரு பெண்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது.

உயிரிழப்புகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பிரதம வழக்குத் தொடுநர் வில்லியம் சாப், “கரபொபோ மாநில பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற துயரமான சம்பவங்களில் 68 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இது தொடர்பாக ஆராய்வதற்கு 4 வழக்குத் தொடுநர்களை நியமித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

வெனிசுவேலாவில் உள்ள சிறைச்சாலைகளில், அளவுக்கு அதிகமானோர் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், விபத்துகளும் முரண்பாடுகளும் அதிகரித்து வருகின்றன. அதேபோல், தொற்று நோய்களும் அதிகரித்து வருகின்றன.

கடந்தாண்டு மாத்திரம், வன்முறைகள், மந்தபோஷோக்கு, காச நோய் ஆகியவற்றின் காரணமாக, குறைந்தது 65 பேர் பலியாகினர் என, சிறைக்கைதிகளின் உரிமைகளுக்கான அமைப்புத் தெரிவித்தது.

அதேபோல், கடந்த வாரத்தில், மார்கரிட்டா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 58 பேர், அங்கிருந்து தப்பியோடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.